இன்டர்நெட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து நேற்றுடன்(ஆக., 23) 25 ஆண்டுகள் நிறைவடைந்தது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே நம் உள்ளங்கைக்குள் வந்து விட்டது. பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியால் உலகில் உள்ள அனைத்து நாட்டினரும் இன்டர்நெட் வழியாக இணைக்கப்பட்டுவிட்டார்கள். சமீபத்திய புள்ளி விவரம் ஒன்றின்படி, உலகில் உள்ள சுமார் 300 கோடி மக்கள் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள் என சொல்லப்படுகிறது.
ஆண்டிப்பட்டியில் அமர்ந்து கொண்டு அமெரிக்காவில் இருக்கும் நபருடன் ஸ்கைப்பில் முகம் பார்த்து நொடி பொழுதில் பேசும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியின் தொடக்க புள்ளியாக அமைந்த நாள் ஆகஸ்ட் 23, 1991.
இங்கிலாந்தை சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானி டிம் பெர்னர்ஸ் லி www என்னும் புரோட்டாக்காலை உருவாக்கினார். இந்த புரோட்டாகால் ஆகஸ்ட் 23, 1991ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இன்டர்நெட் பயன்பாட்டிற்கு அடித்தளமான இந்த புரோட்டகாலுக்கு நேற்று 25 வயது நிறைவடைந்தது.
இன்டர்நெட்டின் சுருக்கமான வரலாறு:
1960 களில் கம்ப்யூட்டர் பயன்பாடுகள் அதிகரிக்க துவங்கியது. ஆனால், ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இன்னொரு கம்ப்யூட்டருக்கு தகவல்கள் பரிமாற்றம் செய்துகொள்ள முடியாது. அமெரிக்காவின் டார்ட்மவுத் மற்றும் பெர்க்லீ பல்கலைகழகங்கள் ஐ.பி.எம். கம்ப்யூட்டர்களை பெருமளவில் பயன்படுத்தின. பிரச்னை குறித்து ஐ.பி.எம் நிறுவனத்திடம் தெரிவித்தன.
இதையடுத்து, ஒரு கம்ப்யூட்டரிலிருந்து மற்றொன்றுக்க தொடர்பை உருவாக்க ‛கலக்டிக் நெட்வொர்க்' எனும் இணைப்பை லிக்லைடர் உருவாக்கினார். இது பல்கலைகழகங்களில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் அமெரிக்க ராணுவத்தில் ரகசிய தகவல்கள் அனுப்புவதற்காக ‛ஆர்பாநெட்' எனும் பெயரில் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து தகவல்கள் அனுப்புவதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.
1968 ல் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற கண்காட்சியில் டக்லஸ் ஏங்கல்பெர்ட் என்பவரால் கம்ப்யூட்டர் மவுஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. 1991 ல் www எனப்படும் புரோட்டோகால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதன் பின்னர், இன்டர்நெட் பயன்பாடு அசுர வளர்ச்சி பெற துவங்கியது.
இன்று கம்ப்யூட்டர் மட்டுமல்லாது கையளவு மொபல் போனிலும் இன்டர்நெட்டை பயன்படுத்தும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
No comments:
Post a Comment