நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு ("நீட்') வாயிலாக நிரப்ப வகை செய்யும் இருவேறு சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து, அடுத்த கல்வியாண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் முறை ரத்து செய்யப்பட்டு, பிளஸ்-2 மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு வாயிலாக மட்டுமே மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப வேண்டும் என்ற சூழல் எழுந்தது. ஆனால், நிகழ் கல்வியாண்டில் அத்தகைய முறையை மாநில அரசுகள் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்றும், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
அதற்கான அவசரச் சட்டம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அண்மையில் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்காக பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் நிகழ் கல்வியாண்டில் ஏற்படவில்லை.
இந்த நிலையில், "நீட்' தேர்வு முறையை அடுத்த கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் அமல்படுத்த வகை செய்யும் இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் தொடர்பான இரு சட்டத் திருத்த மசோதாக்கள், மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் அண்மையில் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அந்த மசோதாக்கள் அனுப்பப்பட்டன. அவற்றைப் பரிசீலித்த பிரணாப் முகர்ஜி, அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் தகவலை மத்திய அரசு உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான அறிவிக்கை அரசிதழில் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் பலத்த எதிர்ப்புக்கு நடுவிலும், இந்த மசோதாக்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு தாக்கல் செய்து, நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment