அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு.. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 13, 2016

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு..

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு...பயிற்சி! பொதுத் தேர்வுகளில் சாதிக்க நடவடிக்கை
பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதித்திட சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கல்விக்காக ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வந்த போதிலும், தனியார் பள்ளி மாணவர்களே பொதுத் தேர்வுகளில் அதிகளவில் சாதித்து வருகின்றனர். இதன் காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதனை தவிர்த்திட தமிழக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்காக கற்றல் திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிறப்பு வகுப்புகள், அனைத்து மாணவர்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பயிற்சி, மாதந்திர மற்றும் பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஆனாலும், மாநில மற்றும் மாவட்ட அளவில் சாதனை படைப்பதில் அரசு பள்ளி மாணவர்கள் அரிதாகவே உள்ளது.

இந்த குறையை போக்கிட தமிழக பள்ளிக்கல்வித்துறை 10ம் வகுப்பு மாணவர்களுக்காக கடந்தாண்டு அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மூலம் 'டான் எக்சல் புராஜெக்ட்' என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு பள்ளிகளில் மாதாந்திர தேர்வுகளில் 450க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 200 பேர் தேர்வு செய்து அவர்களுக்கு மாவட்டத்தில் நான்கு மையங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இதற்காக ஒவ்வொரு பாடத்திலும் சிறந்த ஆசிரியர்கள் தனியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்மூலம் கடந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சாதனை படைத்தனர். அதனையொட்டி இத்திட்டம் இந்தாண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதோடு, பிளஸ் 2 வகுப்பிற்கும் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத் தேர்வுகளில் 450ற்கு மேல் மதிப்பெண் பெற்ற 200 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கடலுார், மஞ்சக்குப்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த 6ம் தேதி சிறப்பு வகுப்புகள் துவங்கப்பட்டது.

இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் பாட வாரிய அனுபவம் மிக்க சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்து செல்ல பயணப்படி, காலை மற்றும் மாலை என இருவேளை பிஸ்கட் மற்றும் தேநீர் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பிற்கு சிறப்பு பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டதை தொடர்ந்து விரைவில் பிளஸ் 2 மாணவர்களுக்கும் துவங்கப்பட உள்ளது.

அதற்காக மாவட்டத்தில் 40 பள்ளிகளில் இருந்து 20 அறிவியல் பிரிவினர், 20 கலைப் பிரிவினர் என மொத்தம் 40 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டடுள்ளனர். இவர்களுக்கு மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பள்ளியில் இம்மாத இறுதிக்குள் சிறப்பு பயிற்சி வகுப்பு துவங்க அனைத்து ஏற்படுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment