‘இக்னோ’ பல்கலை. எம்பிஏ சேர்க்கை முறையில் மாற்றம்: அனுபவம் தேவையில்லை; படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு.
‘இக்னோ’ பல்கலைக்கழகம், எம்பிஏ மாணவர் சேர்க்கை முறையை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, இனிமேல் பணி அனுபவம் இல்லாதவர்களும் எம்பிஏ படிப்பில் சேரலாம். மேலும், படிப்புக் காலமும் இரண்டரை ஆண்டில் இருந்து 2 ஆண்டுகளாககுறைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக் கல்வித் திட்டத்தின் கீழ் முதுகலை பட்டப் படிப்புகள், இளங்கலை பட்டப் படிப்புகள், முதுகலை டிப்ளமா படிப்புகள், சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. மேலும், பிஎட், எம்எட், எம்பிஏ ஆகிய தொழில்சார்ந்த படிப்புகளையும் வழங்குகிறது. பிஎட், எம்எட், எம்பிஏ படிப்புகளுக்கு மட்டும் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மற்ற படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கிடையாது. நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கல்வித்தகுதி இருந்தால், விரும்பும் படிப்புகளில் சேரலாம்.தரமான பாடத்திட்டம் காரணமாக இக்னோ பல்கலைக்கழகத்தின் எம்பிஏ படிப்புக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறையில் தனி மதிப்பு உள்ளது. அரசு, தனியார் பணியில் உள்ளவர்கள் தங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ளவும், பதவி உயர்வு பெறவும் தொலைதூரக் கல்வி முறை எம்பிஏ படிப்பில் சேர்வது வழக்கம்.
இக்னோ பல்கலைக்கழகம் மனித மேலாண்மை, நிதி மேலாண்மை, சந்தை மேலாண்மை உட்பட 5 வகையான பாடப்பிரிவுகளில் எம்பிஏவழங்குகிறது. இந்தப் படிப்புக்கு ‘ஓபன்மேட்’ (OPENMAT) என்ற பிரத்யேக நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கப்படுகின்றனர். ஆண்டுக்கு 2 முறை (பொதுவாக பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்கள்) நடத்தப்படும் இந்த நுழைவுத்தேர்வை பட்டதாரிகள் எழுதலாம். பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதோடு மிக முக்கியமாக 3 ஆண்டு பணிஅனுபவம் (மேற்பார்வை, நிர்வாக பணி) அவசியம். படிப்புக் காலம் இரண்டரை ஆண்டுகளாக இருந்து வருகிறது.
ஆகஸ்ட் 11 கடைசி தேதி
இந்த நிலையில், எம்பிஏ மாணவர் சேர்க்கை முறையை இக்னோ மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, இனிமேல் பணி அனுபவமே இல்லாதவர்களும் எம்பிஏ படிப்பில் சேரலாம். படிப்புக் காலமும் 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் மற்றும் பணி அனுபவம் இல்லாதவர்களும் எம்பிஏ படிப்பில் சேர்ந்து பயன்பெறும் வகையில் சேர்க்கை முறையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக இக்னோ பல்கலைக்கழகத்தின் சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “இந்த புதிய மாணவர் சேர்க்கைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாணவர் சேர்க்கைக்கான ஓபன்மேட் நுழைவுத்தேர்வு செப்டம்பரில் நடக்க உள்ளது. இதற்கு ஆகஸ்ட் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்” என்றார்.
x
No comments:
Post a Comment