தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு, மாணவ, மாணவியர் மாறி வருகின்றனர். இந்த எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், சோத்துப்பாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 483 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த அரசுப் பள்ளிக்கு சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியர் அதிக அளவில் மாறி, படிக்க வருகின்றனர்.
இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கிய காரணமாக விளங்குவது பொருளாதாரப் பிரச்னை தான் எனத் தெரிய வந்துள்ளது.தனியார் பள்ளிகளில், ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை, ஒரு மாணவருக்கு செலவாகிறது. அந்த அளவுக்கு கல்வித்தரம் உயர்வாக இல்லை என, பெற்றோர் புலம்புகின்றனர். எனவே, அரசுப் பள்ளியானாலும் ஓரளவு தரமான கல்வியைக் கொடுக்கும் பள்ளிகளை அவர்கள் நாடுகின்றனர். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியரும், தனியார் பள்ளியில் படிப்பைத் தொடர முடியாமல் அரசுப் பள்ளிக்கு வருகின்றனர்.
அந்த வகையில், சோத்துப்பாக்கம் பகுதி அரசு மேல்நிலைப் பள்ளி கவனத்தைக் கவர்கிறது. ஸ்மார்ட் க்ளாஸ், ஆசிரியர்களின் தனிப்பட்ட அக்கறை போன்ற காரணங்களால் இந்தப் பள்ளி, ஏராளமான தனியார் மாணவர்களை ஈர்க்கிறது. இந்தாண்டு மட்டும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு முடித்து, இந்தப் பள்ளியில், பிளஸ் 1 படிக்க, 36 மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். மேலும், ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை, ஏழு மாணவர்கள் சேர்ந்து உள்ளனர்.
தனியார் பள்ளியில் படித்து வந்தேன். எனக்கு அப்பா கிடையாது. பொருளாதார சூழ்நிலையால் அரசுப் பள்ளியில் சேரலாம் என முடிவெடுத்து, இங்கு சேர்ந்துள்ளேன். பத்தாம் வகுப்பு தேர்வில், 500க்கு, 470 மதிப்பெண்கள் பெற்றேன். அதைவிட அதிக மதிப்பெண்கள் பெற்று, இந்த அரசுப் பள்ளிக்கும், என் அம்மாவுக்கும் பெருமை சேர்ப்பேன்.ஆர்.அட்சயா, பிளஸ் ௧ மாணவி
பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக, தனியார் பள்ளியிலிருந்து சோத்துப்பாக்கம் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளேன். பத்தாம் வகுப்பில், 455 மதிப்பெண்கள் பெற்றேன். என் தந்தையும் இந்தப் பள்ளியில் படித்தவர் தான். எனக்கு தனியார் பள்ளிக்கும், அரசுப் பள்ளிக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.எஸ். சரண்யா, பிளஸ் ௧ மாணவி
நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறோம். இந்த ஆண்டு முழுத் தேர்ச்சி விகிதம் என்ற இலக்கை நோக்கி எங்கள் ஆசிரியர்கள் உழைத்து வருகின்றனர்.
எஸ். ஜோதிவேல்தலைமையாசிரியர், சோத்துப்பாக்கம் அரசு மேனிலைப் பள்ளி
No comments:
Post a Comment