அரசு பள்ளிகளில், 200க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பற்றாக்குறையால், இந்த ஆண்டு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளி மாணவ, மாணவியரின்
கல்வித்தரத்தை உயர்த்த, பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது. ஆனால், மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் அளவிற்கு திறமையான ஆசிரியர்கள் உள்ளனரா, ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறதா என்பதை கவனிப்பதில், கல்வித்துறை கொஞ்சம் அலட்சியம் காட்டுகிறது.
இதனால், பொதுத்தேர்வுகளில் அரசு பள்ளிகளால் எதிர்பார்த்த அளவில் சாதிக்க முடிவதில்லை.
அந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ் 2 தேர்ச்சி, கடந்த ஆண்டை விட, 1.45 சதவீதம் குறைந்தது. அதையடுத்து, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், பள்ளி தலைமை ஆசிரியர்களை அழைத்து விளக்கம் கேட்டார். ஆசிரியர் பற்றாக்குறையை முக்கிய காரணமாக இருந்ததால், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என நான்கு பிராந்தியத்திலும் பணியாற்றும் விரிவுரையாளர்கள் 500 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 75 பேருக்கு, விரிவுரையாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, பிளஸ் 2 வகுப்புக்கு பாடம் நடத்த நியமிக்கப்பட்டனர்.
அதே சமயத்தில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியரை அரசு கவனிக்க மறந்து விட்டதால், பல பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
210 பேர் பற்றாக்குறை
புதுச்சேரி மாநிலத்தில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பாடம் நடத்தும் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், கடந்த மே மாதம் 75 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரிவுரையாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
ஓய்வு பெற்றவர்கள் 30 பேர், இதுதவிர ஏற்கனவே 40 காலியிடங்கள் என, மொத்தம், 150க்கும் மேற்பட்ட இடங்கள் தற்போது காலியாக உள்ளன. மேலும், தலைமை ஆசிரியர் (நிலை 2) பதவிக்கு, 69 பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
எனவே, மொத்தம் 210 இடங்கள் விரைவில் காலியாக உள்ளது. அந்த காலி பணியிடங்களை நிரப்ப அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவ மாணவியரை தனியர் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தி தயார் செய்து வருகிறது.
ஆனால், பள்ளிகள் திறந்து 1 மாதம் ஆகியும், பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் என முக்கிய பாடங்கள் நடத்தப்படாமலேயே உள்ளது. ஒரு சில ஆசிரியர்களை வைத்து சில பள்ளிகளில் சமாளித்து வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஆண்டு, புதுச்சேரி மாநிலத்தில், தேர்ச்சி சதவீதம் அதிகரித்திருந்தது. புதுச்சேரி பிராந்தியத்தில் 1.13 சதவீதமும், காரைக்காலில் 6.11 சதவீதமும் தேர்ச்சி சதவீதம் உயர்ந்தது. ஆனால், ஆசிரியர் பணியிடங்கள் காலியாகி விட்டதால், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சரியும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பிளஸ் 2 மாணவ, மாணவியரின் படிப்பு விஷயத்தில் அரசு எடுத்துக்கொண்ட அதே அக்கறையை, பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் விஷயத்திலும் அரசு செலுத்த வேண்டும்.
உடனடியாக புதிய ஆசிரியர்களை நியமிக்க முடியவில்லை என்றாலும், தொடக்க பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நிறைய பேர் உள்ள நிலையில் அவர்களை அலுவலக உத்தரவில் (ஆபிஸ் ஆர்டர்) பத்தாம் வகுப்புக்கு பாடம் எடுக்க நடவடிக்கை எடுக்கலாம். தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும் கூட, இந்த சிக்கலை தவிர்க்கலாம் என, கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment