உயர்கல்வி உதவித் தொகை குறைப்பு: தவிப்பில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள்!
பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி உதவித் தொகையை தமிழக அரசு குறைத்துவிட்டதால் நிகழாண்டு 1.50 லட்சம் மாணவர்களின் உயர்கல்வி கேள்விக்குறி ஆகியுள்ளது.
சிறப்பு உதவித் தொகை: கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதி திராவிட மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் வகையில் கடந்த 2012இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார்.
குஜராத், மகராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், ஆந்திரம்,கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்சி, எஸ்டி மாணவர்களது உ.யர்கல்வி செலவை அரசே ஏற்கும் வகையில் திட்டம் உள்ளதாகவும், தமிழகத்திலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற பல்வேறு கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இத்திட்டத்தை அறிவித்தார். இதன்படி, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டமும் அமலுக்கு வந்தது.
இத் திட்டத்தின்படி உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். கல்வி நிலையத்துடன் இணைந்த விடுதிகளில் தங்கி பட்ட மேற்படிப்பு, மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த சிறப்பு உயர் கல்வித் தொகை வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித்தொகையைப் பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் மூலமாக அந்தந்த மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில், ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.
உதவித் தொகை குறைப்பு: இத் திட்டத்தில், பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டது. ஆனால், நிகழாண்டு இத் தொகை ரூ.50 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இத் திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர், மாணவிகளுக்கு பெரிதும் சுமை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், 2017-18ஆம் ஆண்டில் கல்விக்கட்டணமானது உயர்ந்துள்ளது. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவானது, 2016-17இல் பிஇ, பிடெக், பிஆர்க் உள்ளிட்ட படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் ரூ.40 ஆயிரமாக இந்த கல்விக் கட்டணம் (ஆண்டுக்கு), 2017-18, 2018-19 ஆண்டுகளுக்கு ரூ.50 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டில் ரூ.70 ஆயிரமாக இருந்த கல்விக் கட்டணம், ரூ.85 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில், எஸ்சி, எஸ்டி மாணவர் ஒவ்வொருவரும் அரசு வழங்கும் ரூ.50 ஆயிரம் உதவித் தொகையை தவிர்த்து மீதமுள்ள ரூ.35 ஆயிரத்தை சொந்த செலவில் செலுத்த வேண்டியுள்ளது. இல்லையெனில், விடுதியை விட்டும், கல்லூரியை விட்டும் இடைநிற்கும் சூழல் எழுந்துள்ளது. கல்விக் கட்டணம் உயர்ந்தால் உயர்வுக்கேற்ப உதவித் தொகையை உயர்த்த வேண்டும். ஆனால், ஒருபுறம் கல்விக் கட்டணத்தை உயர்த்திவிட்டு, மறுபுறம் கல்வி உதவித் தொகையை குறைத்து அரசாணை வெளியிட்டிருப்பது, தமிழக அரசானது தெரிந்தே கிணற்றில் குதிக்கும் செயலை செய்திருப்பதாக தலித் அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இதுதொடர்பாக, அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்க மாநில அமைப்பாளர் மா. பரதன் கூறியது:
தமிழகத்தில் அண்மைய கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 7.21 கோடியாக உள்ளது. இதில், ஆதிதிராவிடர் 1.44 கோடி, பழங்குடியினர் 7.95 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் கல்வியறிவு பெற்றோர் (இருபாலரும் சேர்த்து) ஆதிதிராவிடரில் 73,.26 சதமும், பழங்குடியினரில் 54.34 சதமும் உள்ளனர். இந்த எண்ணிக்கையை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும். குறிப்பாக உயர்கல்வி, தொழிற்கல்வி கற்போர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை திட்டம் கொண்டுவரப்பட்டது. இப்போது, அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையில் உதவித் தொகையை குறைத்துள்ளது தமிழக அரசு. கல்விக் கட்டணத்தை குறைத்துவிட்டு உதவித் தொகையை குறைக்கலாம். ஆனால், கல்விக் கட்டணத்தை உயர்த்திவிட்டு உதவித் தொகையை குறைத்திருப்பது உள்நோக்கமுடையது. எனவே, ஆதிதிராவிட நலத்துறையின் அரசாணை எண் 51, 52ஐ ரத்து செய்ய வேண்டும் என்றார்.
மீண்டும் திரும்பிய 2013: கடந்த 2013ஆம் ஆண்டில் இதேபோல கல்வி உதவித் தொகையை குறைத்து அரசாணை எண் 106, 107 வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து பட்டியிலன அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களை நடத்தியதாலும், அரசுக்கு கோரிக்கை மனுக்களை அளித்ததாலும் அந்த அரசாணைகள் திரும்பப் பெறப்பட்டன. முழு அளவிலான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இப்போது, மீண்டும் கல்வி உதவித் தொகையை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்துள்ளோம். மாநில அளவில் ஆலோசனை நடத்தி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் தேவேந்திரன் தெரிவித்தார்.
நிகழாண்டு ரூ.2935.65 கோடி!: தமிழக அரசின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 2017-18ஆம் ஆண்டுக்கு மொத்தமாக ரூ.3,281.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.2,935.65 கோடி (89.46 விழுக்காடு) ஆதிதிராவிட, பழங்குடியின கல்வி மற்றும் கல்வி சார்ந்த திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய உதவித் தொகை போதுமானதாக வரவில்லை. இந்த சூழலில் கல்விக் கட்டணமும் உயர்ந்துவிட்டதால் உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்துவதில் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், உயர்கல்விக்கான சிறப்பு உதவித் தொகையை முழுமையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆதி திராவிட நலத்துறை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment