தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட தரமற்ற பள்ளி கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை: கல்வித்துறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, December 19, 2021

தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட தரமற்ற பள்ளி கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை: கல்வித்துறை

தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட தரமற்ற பள்ளி கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை: கல்வித்துறை 

         நெல்லையில் பள்ளி கழிவறை கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்களை இடிக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

         திருச்சி மாவட்டத்தில் 1200-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. இதில் 410 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகள், கழிவறைகள், இதர கட்டுமானங்கள் இடிக்க வேண்டிய ஆபத்தானநிலையில் இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி தெரிவித்துள்ளார். 

     புதுக்கோட்டை மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 100 பள்ளிகளின் கட்டிடங்களை இடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்தபணிகள் இன்று முதல் தொடங்கும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கட்டிடங்களை உள்ளாட்சித்துறையும், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி கட்டிடங்களை பொதுப்பணித்துறையினரும் இடித்து அப்புறப்படுத்த உள்ளனர். 

     பெரம்பலூர் மாவட்டத்தில் 73 பள்ளிக்கூடங்களில் பழமையான, சேதமடைந்த கட்டிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையும் இடிக்க கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

         கரூர் மாவட்டத்தில் 820 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் இதர கட்டுமானங்களை பொதுப்பணித்துறை ஆய்வு செய்து வருகிறது. முதற்கட்டமாக 30 பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் இருப்பதாக கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார். 

 அரியலூர் மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பழமையான, சேதமடைந்த பள்ளிக்கட்டிடங்கள் 80 கண்டறியப்பட்டுள்ளன. இதனை இடிக்க கல்வித்துறை கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 

 மதுரை மாவட்டத்தில் தரமற்றதாக அடையாளம் காணப்பட்ட 200 பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடிக்க மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார். இதில் 120 வகுப்பறை கட்டிடங்கள், 80 கழிவறை கட்டிடங்களும் அடங்கும். மேலும் இந்த கட்டிட பகுதிகளுக்கு அருகில் மாணவர்கள் செல்லாத வகையில் தடுப்பு ஏற்படுத்தி கட்டிடங்களை இடித்து இடிபாடுகளை உடனடியாக அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

     ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, தனியார் என 1,531 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. உதவி பொறியாளர்கள் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளி கட்டிடங்கள், வகுப்பறைகள், கழிப்பறைகளை ஆய்வு செய்து உடனே அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்யும் பணி வருகிற 20-ந் தேதி முதல் தொடங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்தார். 

     குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள1230 அரசு பள்ளி ,அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள். பள்ளியின் கட்டிடத்தின் தன்மை மற்றும் அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்யும் இந்த குழுவினர் தரமற்ற பள்ளி கட்டிடங்கள் தொடர்பாக கணக்கெடுத்து அந்தப் பள்ளிக் கட்டிடங்களை இடிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். 

         மாவட்டத்தில் 50-க்கு மேற்பட்ட கட்டிடங்கள் சேதம் அடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது பள்ளிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் மீண்டும் பள்ளிகளை ஆய்வு செய்து தரமற்ற கட்டிடங்களை கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பித்ததும் அந்த கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 

     நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி கட்டிடங்கள் ஆய்வு குறித்து சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுபாஷினி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

         கூட்டத்தில் பள்ளி கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து எப்படி ஆய்வு செய்வது? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி கள் தலைமையில் பள்ளிக் கூடங்களை ஆய்வு செய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். 

        இவர்கள் இன்று முதல் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள கட்டிடங்களின் ஸ்திரத் தன்மை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள். இதேபோன்று அனைத்து மாவட்டங்களிலும் தரமற்ற பள்ளி கட்டிடங்களை இடிப்பதற்கு மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment