புதுக்கோட்டை சிஇஓ தகவல்
தமிழகத்தில் 25 சதவீதம் மாணவிகள் காலை உணவை சாப்பிடாமலேயே பள்ளிக்கு வருகின்றனர் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சாத்தியமூர்த்தி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை இன்று (டிச.9) ஆய்வு செய்த பின்னர் அவர் பேசியது: கரோனா பரவலினால் கடந்த 2 ஆண்டுகள் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை.
வரும் ஆண்டுகள் வசந்தமாகும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நிகழாண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும். தேர்வு இருந்தால்தான் எதிர்காலங்களில் போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள முடியும்.
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கோபமாக நடந்துகொள்ளாமல், அன்போடு நடந்துகொள்ளுங்கள்.
பொதுவாக பெற்றோர் மீது கோபம், விரைவாக பள்ளிக்கு வரவேண்டும் என்ற எண்ணம், உடம்பு ஏறிவிடும் என்று கூறிக்கொண்டு தமிழகத்தில் 25 சதவீதம் மாணவிகள் காலை உணவை சாப்பிடுவதில்லை என ஆய்வு முடிவு கூறுகிறது.
காலை உணவு சாப்பிடாவிட்டால் ரத்தசோகை, மூளை சோர்வு ஏற்படும். கற்றல் பாதிக்கப்படும்.
கடந்த ஆண்டு 4 மாணவிகள் டாக்டருக்கு படித்துக்கொண்டு இருக்கிறார்கள். நிகழாண்டு 7 பேருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இதன் எண்ணிக்கை 70 ஆக உயர வேண்டும்.
பெண் கல்விதான் நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்குகிறது.
என் வெற்றிக்கு பின்னால் இருப்பவர் என் மனைவிதான். இதுவரை, என்னிடம் நகை, பணம், சொத்து என எதையும் கேட்டதில்லை. ஆகையால்தான், நான் நெறியோடு பணிபுரிந்து வருகிறேன். எனவே, பெற்றோர்களை வணங்கி, அவர்களின் கனவை மாணவ, மாணவிகள் நினைவேற்ற வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து, செரியலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்என்எம்எஸ் தேர்வில் வெற்றி பெற்ற 21 மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களை பாராட்டினார். மேலும், மாணவர்களுக்கு பயிற்சி புத்தகமும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment