ஜனவரி 3ம் தேதி முதல் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி - பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். 2022ஆம் ஆண்டை வரவேற்க தயாராகிக்கொண்டிருக்கிறோம். கொரோனா இன்னும் நம்மை விட்டு போகவில்லை. தற்போது பண்டிகை காலம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
12 மாதங்களாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போது கிட்டத்தட்ட 90 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்புசி செலுத்தப்பட்டுள்ளது.
61 சதவீதம் மக்கள் இரண்டு தவணையும் செலுத்தி உள்ளனர். உத்தரகாண்ட், டெல்லி, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது நமது சுகாதார கட்டமைப்பின் வலிமையை காட்டுகிறது. நமது தடுப்பூசி திட்டம் விஞ்ஞான அடிப்படையிலானது.
கொரோனா இன்னும் நம்மை விட்டு விலகவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடியுங்கள்.
அதேசமயம் ஒமைக்ரான் தொற்றைக் கண்டு அச்சமடைய வேண்டாம்.
தடுப்பூசியின் பலன்கள் மக்களுக்கு கிடைத்துக்கொண்டிருக்கின்றன. ஜனவரி 3ம் தேதி முதல், 15 வயது முதல் 18 வயது உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment