வேலூர் மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, March 4, 2015

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம்

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்–2 தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 31–ந் தேதி வரை நடக்கிறது. திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 21 ஆயிரத்து 615 மாணவ–மாணவிகளும், வேலூர் கல்வி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 823 மாணவ–மாணவிகளும் என மொத்தம் 42 ஆயிரத்து 438 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
கடந்த ஆண்டு பிளஸ்–2 தேர்வுக்கு 134 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு கூடுதலாக 7 மையங்கள் சேர்த்து 141 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அத்திப்பட்டு, குனிக்காத்தூர், ஜமுனாமரத்தூர் ஆகிய 3 மலைக்கிராமங்களுக்கு வேலூர் மாவட்டம் சார்பில் 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ்–2 தேர்வுகளை கண்காணிக்க 144 முதன்மை கண்காணிப்பாளர்கள்
, 144 கல்வித்துறை அதிகாரிகள், 2 ஆயிரத்து 122 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களை கண்காணிக்கவும், காப்பியடிப்பவர்களை பிடிக்கவும் 325 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
அது தவிர கலெக்டர் நந்தகோபால், முதன்மைக் கல்வி அலுவலர் குமார், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் ஜெயமீனாதேவி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மனோகரன், பிரியதர்ஷினி, மற்றும் அலுவலர்கள் தேர்வு மையங்களை கண்காணிக்கின்றனர்.
மேலும் வேலூர் மாவட்டத்தில் பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளை கண்காணிக்க மெட்ரிக் பள்ளி இயக்குனர் பிச்சை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் தேர்வு மையங்களை கண்காணிப்பார்.
முதல் நாளான நாளை (வியாழக்கிழமை) தமிழ் முதல் தாள் தேர்வு நடக்கிறது. தேர்வு தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு மாணவ–மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிப்படுவார்கள். சரியாக காலை 10 மணிக்கு மாணவ– மாணவிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும்.
முதல் 10 நிமிடம் கேள்வித்தாளை படித்து பார்ப்பதற்கும், பின்னர் விடைத்தாள்களில் மாணவர்கள் பெயர்களையும், ஹால்டிக்கெட் சரிபார்க்க 5 நிமிடமும் ஒதுக்கப்படும். தேர்வுகள் காலை 10.15 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணிவரை நடைபெறும்.
தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பிட வசதி, தடையில்லா மின்சாரம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பிளஸ்–2 தேர்வுக்கான வினாத்தாள்கள் மாவட்டத்தில் 18 இடங்களில் வினாத்தாள்கள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு அந்த அறைக்கதவு பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த அறையின் முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கிருந்து வினாத்தாள்களை கொண்டு செல்ல 25 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் (திருவண்ணாமலை மலை கிராமங்கள் தவிர்த்து) 2 பேர் வீதம் மொத்தம் 282 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் 13 பள்ளிகள் பதற்றமானவையாக உள்ளதால் அங்கு கூடுதலாக தலா ஒரு சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வினாத்தாள்களை பள்ளிக்கு கொண்டு செல்லும் அலுவலர்களுடன் பாதுகாப்பு பணியில் செல்ல திருப்பத்தூர் கல்வி மாவட்டத்துக்கு 14 பேரும், வேலூர் கல்வி மாவட்டத்துக்கு 14 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் தேர்வுகள் முடிந்தவுடன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த விடைத்தாள்கள் ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் மேல்நிலை பள்ளியிலும், வேலூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த விடைத்தாள்கள் வேலூர் ஹோலிகிராஸ் மேல்நிலை பள்ளியிலும் வைக்கப்பட உள்ளன. இங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment