தேர்வு அறையில் நாற்காலி: உத்தரவில் மாற்றம் : ஆசிரியர்கள் எதிர்ப்புக்கு பணிந்தது கல்வித்துறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, March 3, 2015

தேர்வு அறையில் நாற்காலி: உத்தரவில் மாற்றம் : ஆசிரியர்கள் எதிர்ப்புக்கு பணிந்தது கல்வித்துறை

 பிளஸ் 2 தேர்வில், தேர்வு அறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு நாற்காலி போடத் தடை விதித்துள்ளதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரத்த அழுத்தம், இதயப் பிரச்னை மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
 
         தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும், 5ம் தேதி துவங்குகிறது. மாணவர்களை விழிப்புடன் கண்காணிக்க, தேர்வு அறையில், கண்காணிப்பாளர்களுக்கு நாற்காலி போடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இத்துடன், நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பையும், அதிருப்தியையும் வெளிப்படுத்திஉள்ளனர். 
        'மூன்று மணி நேரம் நின்று கொண்டே இருப்பது இயலாத காரியம். சர்க்கரை நோய் பாதித்தோர் சில நிமிடங்களுக்கு மேல் நின்றால் மயங்கி விடுவர். ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உடல் வியர்த்து அழுத்தம் அதிகமாகும். இதயப் பிரச்னை உள்ளவர்களும் சோர்வாகி விடுவர்' என, தேர்வுத்துறையிடம் ஆசிரியர்கள் 
முறையிட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகப் பொதுச்செயலர் ஜனார்த்தனன் கூறும் போது, ''நாற்காலி போடுவதா, வேண்டாமா என்பதை, ஆசிரியர்களின் வயது மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம். சம்பந்தப்பட்ட ஆசிரியரின் தேர்வு அறையில், தவறுகள் தெரிந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்,'' என்றார்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற கழகத் தலைவர் சிங்காரவேல் கூறும்போது, ''உடல்நலப் பாதிப்பு குறித்த ஆசிரியர்களின் பிரச்னைகளை, தேர்வுத் துறைக்கு எடுத்துக் கூறியுள்ளோம். நின்று கொண்டே இருக்க முடியாதோருக்கு தேர்வுப் பணியில் இருந்து விலக்கு வேண்டும்,'' என்றார்.இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்ககத்தில் விசாரித்த போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, நாற்காலி தொடர்பாக, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'நாற்காலி போட வேண்டாம் என்பதை ஆசிரியர்களின் வயது, உடல்நலன் கருதி முடிவெடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக நாற்காலி தர வேண்டும்' என, வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment