ராக்கிங்'கில் ஈடுபடும் மாணவர்களுக்கு... எச்சரிக்கை! அரசுக் கல்லூரிகளில் கண்காணிப்பு குழு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, June 24, 2016

ராக்கிங்'கில் ஈடுபடும் மாணவர்களுக்கு... எச்சரிக்கை! அரசுக் கல்லூரிகளில் கண்காணிப்பு குழு

கடலுார் மாவட்டத்தில் உள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் 'ராக்கிங்'கை தடுக்கும்விதமாக, பேராசிரியர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு முடிவு கடந்த மே மாதம் 17ம் தேதி வெளியானது. இதில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி படிக்க விண்ணப்பித்து கல்லுாரிகளில் சேர்ந்து வருகின்றனர்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிந்து, வகுப்புகள் துவங்கி நடந்து வருகிறது.

கல்லுாரிக்கு வரும் முதலாமாண்டு மாணவ, மாணவியர்களை சீனியர் மாணவ, மாணவியர்கள் 'ராக்கிங்' செய்வது வழக்கம். 'ராக்கிங்' பிரச்னைக்கு ஆளாகுபவர்கள், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு எதிர்காலம் கேள்விக்குறியாவதுடன், தற்கொலைக்கு ஆளாகின்றனர்.

இதுபோன்ற பிரச்னைகளை தடுக்கும் விதமாக, கல்லுாரி கல்வி இயக்ககம், மாநிலத்தில் உள்ள அரசுக் கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.

அதில்,'ராக்கிங் செய்யும் மாணவர்களை கண்டுபிடிக்க கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் உள்ள ,மூன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், மூன்று முதல், ஐந்து மூத்த பேராசிரியர்கள் அடங்கியுள்ளனர்.

இதுகுறித்து அரசு கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறுகையில், 'அரசு கல்லுாரிகளில் 'ராக்கிங்' கை தடுக்கும் விதமாக கல்லுாரி கல்வி இயக்கம் அறிவுறுத்தலின் பேரில், எங்கள் கல்லுாரியில் 5 மூத்த பேராசிரியர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், கல்லுாரி நுழைவு வாயில், கல்லுாரி வளாகம், வகுப்பறைகளை கண்காணித்து, 'ராக்கிங்' செய்வோரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 'ராக்கிங்' செய்தால் அரசு விதிமுறைபடி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவ, மாணவியருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். புகார் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது'என்றார்.

No comments:

Post a Comment