மாணவர்களை ஈர்க்கும் பொறியியல் படிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, June 26, 2016

மாணவர்களை ஈர்க்கும் பொறியியல் படிப்பு

பிளஸ் 2 முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேரவே விரும்புகிறார்கள். மாணவர்கள் மத்தியில் பொறியியல் படிப்பு மீதான ஆசை தற்போது சற்று குறைந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்த்தால் இப்படிப்பின் மீதான மோகம் இன்னும் குறைந்துவிட வில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் பிஇ. பிடெக் படித்துவிட்டு எப்படியாவது தகவல் தொழில்நுட்பம்,
சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியில் சேர்ந்துவிடமாட்டார்களா என்றுதான் ஏங்குகிறார்கள்.
இந்த ஏக்கம் கிராமம் தொட்டு நகரம் வரை ஒன்றுபோலவே இருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு பிஇ, பிடெக் பட்டதாரி என்றால் வியப்போடு பார்ப்பார்கள். காரணம், அப்போதுபொறியியல் கல்லூரிகள் மிகக் குறைவாக இருந்தன. தற்போது பொறியியல் கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில்இருப்பதால் விண்ணப்பித்த அனைவருக்குமே எளிதில் இடம் கிடைத்துவிடுகிறது. விருப்பமான கல்லூரி கிடைப்பதிலும்,பிடித்தமான பாடப்பிரிவு கிடைப்பதிலும் வேண்டுமானால் ஆசை நிறைவேறாமல் போகலாம். மற்றபடி கண்டிப்பாக இடம் உறுதி.
தமிழ்கத்தில் தற்போது 524 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.
இவற்றில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் பிஇ, பிடெக் இடங்கள் பொது கவுன்சலிங் மூலம் ஒற்றைச்சாளர முறையில் (Single Window System) நிரப்பப்படுகின்றன. சிங்கில் விண்டோ சிஸ்டம் முறையின்படி,மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியே விண்ணப்பம் போடத் தேவையில்லை.ஒரு விண்ணப்பம் போதும். கலந்தாய்வின்போது பிடித்தமா்ன கல்லூரியை தேர்வு செய்துகொள்ளலாம்.
இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்தியது. ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 994 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
பொது கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி கணினி மூலம் ஆன்லைனில் ரேண்டம் எண் எனப்படும் சம வாய்ப்பு எண் ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜூன் 22-ல் தரவரிசைப் பட்டியலை (ரேங்க் லிஸ்ட்) வெளியிட்டனர்.
பிடித்தமான கல்லூரியை, பிடித்தமான பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான பொது கலந்தாய்வு ஜூன் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 21-ம் தேதி வரை ஏறத்தாழ ஒரு மாத காலம் நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து தொழிற்கல்விபிரிவு மாணவர்களுக்கு ஜூலை 23, 24-ம் தேதி கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
மொத்தமுள்ள ஒரு லட்சத்து 92 ஆயிரம்இடங்களுக்கு ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். எனவே, ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போன்று விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் உறுதி. பிடித்தமான கல்லூரி, பிடித்தமான பாடப்பிரிவு கிடைக்குமா?என்பதில்தான் போட்டி இருக்கும்.
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் அதற்கு அடுத்தபடியாக சென்னையைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் சேர வேண்டும் என்பதுதான் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களின் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றுவது அவர்களின் கட் ஆப் மதிப்பெண்தான். கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில்தான் ஒவ்வொருவரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
ஏழை, வசதி படைத்தவர், அரசு அதிகாரியின் மகன், கூலித்தொழிலாளியின் பிள்ளை யார் என்றாலும் சரி கலந்தாய்வு வரிசையை முடிவு செய்வது கட் ஆப் மதிப்பெண் தானே ஒழிய, எந்த விதமான சிபாரிசும் அங்கு எடுபடாது. திரையரங்கு,ரேஷன் கடை போன்ற இடங்களில் வரிசையில் இடையில் புகுந்துவிடுவதைப் போல குறைந்த கட் ஆப் மதிப்பெண் வைத்துக்கொண்டு இடையில் யாரும் புகுந்துவிட முடியாது. கழுத்தைப் பிடித்து உரிய வரிசையில் நிற்கவைத்துவிடுவார்கள்.
கலந்தாய்வின்போது கல்லூரியை தேர்வு செய்வது எப்படி?
பொறியியல் படிப்பில் சேர விரும்பும் அனைத்து மாணவர்களின் மனதில் தோன்றும் முக்கியமான கேள்வி, முதலில் கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுப்பதா? அல்லது பாடப்பிரிவுக்கு முக்கியத்துவம் தருவதா? என்பதுதான். 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குக்கூட இந்த குழப்பம் இருக்கலாம். பொதுவாகவே, என்ன படிக்கிறோம் என்பதைவிட எந்த கல்லூரியில் படிக்கிறோம் என்பது வளாக நேர்முகத்தேர்வின்போது அதிகம் கருத்தில் கொள்ளப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்திலோ, அல்லது புகழ்பெற்ற தனியார் கல்லூரிகளிலோ படிக்கும் மாணவர்களின் தரம்இவ்வாறு இருக்கும் என்று நிறுவனங்கள் ஒரு கணிப்பு வைத்துள்ளன.
அதனால்தான், முக்கியத்துவம் குறைவாக கருதப்படும் ஒரு படிப்பு என்றாலும் பரவாயில்லை, கல்லூரி புகழ்பெற்ற கல்லூரியா? என்பதில்தான் மாணவர்களும்ஆர்வம் காட்டுகிறார்கள். அதில், உண்மை இல்லாமலும் இல்லை. இருப்பினும், பாடப்பிரிவா,? கல்லூரியா? என்று வரும்போது கல்லூரிக்கு முதலில் முக்கியத்துவம் அளிப்பதே நல்லது.
கலந்தாய்வு நேரத்தில் அளிக்கப்படும் நேரத்தில் குறிப்பிட்ட கல்லூரியை, குறிப்பிட்ட பாடப்பிரிவை முழுமையான திருப்தியுடன் தேர்வு செய்ய இயலாது. எனவே, மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் 10 அல்லது 15 கல்லூரிகளை முன்கூட்டியே தேர்வு செய்து கொண்டு அந்த கல்லூிகளைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வது நல்லது. ஏற்கெனவே அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளிடம் அக்கல்லூரியில் உள்ள அடிப்படை வசதிகள், கல்வித்தரம், விடுதிவசதி, கேம்பஸ் இண்டர்வியூ போன்ற தகவல்களை அறிந்துகொள்ளலாம். இவ்வாறு செய்தால் அந்தக் கல்லூரிகளைப்பற்றிய அடிப்படை விவரம் ஓரளவு புரிந்துவிடும்.
ஒவ்வொரு நாளும் கலந்தாய்வு நிறைவடைந்ததும் அன்றைய தினம் மாலை 6 மணியளவில் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகளில் எத்தனை காலியிடங்கள் உள்ளன? என்ற அட்டவணையை இட ஒதுக்கீட்டுப் பிரிவுவாரியாக அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிடுவார்கள். எனவே, கலந்தாய்வு தொடங்கிய நாள் முதலே தினமும் அந்த பட்டியலை பார்த்துவர வேண்டும்.
அதேபோல், சேர விரும்பும் குறிப்பிட்ட பாடப்பிரிவு அந்தகல்லூரியில் ஒருவேளை காலியாகிவிட்டால் 2-வது அல்லது 3-வது விருப்பமாக வேறு பாடப்பிரிவுகளையும் முடிவுசெய்துகொள்ள வேண்டியது அவசியம். எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் சேர விரும்புகிறீர்கள். அதற்கு அடுத்த வாய்ப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது மெக்கானிக்கஸ் இன்ஜினியரிங் என தங்களுக்குப் பிடித்தமான மாற்று பாடப்பிரிவுகளையும் முன்னரே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
தங்களுக்குப் பிடித்தமான கல்லூரியில், விருப்பமான பாடப்பிரிவில் இடம் காலியாகிவிட்டால், பதற்றம் அடைந்துவிடக்கூடாது. 2-வது அல்லது 3-வது மாற்று பாடப்பிரிவில் காலியிடங்கள் இருந்தால் தாராளமாக அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம். ஐயோ, அந்த கல்லூரியில், நான் சேர விரும்பும் பாடப்பிரிவில் இடம் முடிந்துவிட்டதே என கலந்தாய்வின்போது பதற்றப்படக் கூடாது.
அடுத்த பாடப்பிரிவை தேர்வு செய்வதுதான் புத்திசாலித்தனம். பிடித்தமானபாடப்பிரிவில் இடம் இருக்கிறது என்று சொல்லி முன்பின் தெரியாத கல்லூரியை தேர்வுசெய்வதை விட, நல்ல கல்லூரியில், வேறு பாடப்பிரிவை தேர்வு செய்வது படிப்பது எவ்வளவோ மேல். படிக்க விரும்பும் கல்லூரிகளின் உத்தேச பட்டியலை தயாரித்து அந்தக் கல்லூரிகள் பற்றிய விவரங்களை முன்கூட்டியே அலசி ஆராய்ந்து தெரிந்துகொண்டால்கலந்தாய்வின்போது எந்தவிதமான குழப்பமோ, பதற்றமோ இன்றி விரும்பும் கல்லூரியை தேர்வுசெய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment