உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கை துரிதமாக நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பென்ஜமின் கூறினார். மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு
சட்டசபையில் நேற்று நடந்த பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை, விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை
மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் உறுப்பினர் ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல் தொகுதி) பேசினார். அவர் தனது பேச்சின் இடையே அரசு பள்ளிகளின் நிலை குறித்து ஒரு கருத்தை தெரிவித்தார். அந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் ப.தனபால் நீக்கினார். இதுகுறித்து, பதில் அளித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் பா.பென்ஜமின், “உறுப்பினர் தவறான தகவலை அவைக்கு தருகிறார். தமிழ்நாட்டில் 24,103 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளும், 7,219 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் 22 லட்சத்து 34 ஆயிரத்து 995 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் தொடக்கப் பள்ளியும், 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நடுநிலைப் பள்ளியும் உள்ளன. புதிதாக 211 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதுடன், 112 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது” என்றார். தனியார் பள்ளிகளில் சிறந்த கல்வி? தொடர்ந்து உறுப்பினர் பிரின்ஸ், “6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் சிறந்த கல்வியை தருகிறார்கள். எனவே, அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்புகளை தொடங்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. அதை உடனே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆசிரியர்கள் நியமனத்தில் 50 சதவீதம் சீனியாரிட்டி அடிப்படையிலும், 50 சதவீதம் தகுதித் தேர்வு வெற்றியின் அடிப்படையிலும் நியமிக்க வேண்டும்” என்றார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் பென்ஜமின், “ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை துரிதமாக நடத்தி முடிக்க தமிழக அரசு சார்பில் வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கு முடிந்த பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
No comments:
Post a Comment