மத்திய நூலக புத்தகங்கள், 'டிஜிட்டல் மயம்': தகவல் களஞ்சிய தொகுப்பு மும்முரம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 2, 2016

மத்திய நூலக புத்தகங்கள், 'டிஜிட்டல் மயம்': தகவல் களஞ்சிய தொகுப்பு மும்முரம்

மத்திய நுாலகத்தில் உள்ள புத்தகத்தை, 'ஸ்கேன்' செய்து, 'பார் கோடு' இணைப்பதோடு, புத்தகத்தின் அனைத்து பக்கங்களையும், தகவல்களாக தொகுக்கும் பணி நடக்கிறது. இதன்மூலம், அரிய புத்தகங்கள் தொலைந்து போனாலும், தகவல் தொகுப்பு மூலம்
அச்சிட்டு கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில், 256 நகர, தாலுக்கா,
கிளை, பகுதிநேர நுாலகங்கள் உள்ளன. இது, 205 நுாலகர்களை கொண்டு நிர்வகிக்கப்படுகிறது. மத்திய நுாலகத்தை சேர்த்து,
40 லட்சத்து, 41 ஆயிரத்து, 910 புத்தகங்கள் உள்ளன.
இதில், வாசகர்கள் வாசிக்கப்பட்ட நுால்கள், 39 லட்சத்து, 34 ஆயிரத்து 691. இந்த நுால்கள், காணாமல் போனாலோ அல்லது திருப்பி அளிக்காமல் இருந்தாலோ, சம்மந்தப்பட்ட நுாலகரின் சம்பளத்தில் இருந்து தான், தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால், நுாலகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
மேலும், தனியார் புத்தக கடைகளில், நுால்களை காக்க, பார்கோடு இணைப்பது, சி.சி.,'டிவி' கேமரா பொருத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன. அரசு இயந்திரங்களில், பாதுகாப்பின்மை பிரச்னைகள் ஏற்படுவதால், அரிய தகவல்கள் களவு போகும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.
இதை தடுக்கும் நோக்கில், 2015ல், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட, மூன்று மாவட்டத்தின் மைய நுாலகத்தில் இருக்கும் புத்தகங்களை மட்டும், ஸ்கேன் செய்து, பார் கோடு இணைக்க, மாநில அரசு உத்தரவிட்டது.
கோவை மாவட்டத்துக்கு மட்டும், 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஆர்.எஸ்.புரம் மைய நுாலகத்தில், 1.29 லட்சம் புத்தகங்களுக்கு, பார்கோடு இணைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், புத்தகத்தின் முன்னுரை, விலை, பதிப்பு நிறுவன பெயர், நுாலை வாசிக்க தேர்வு செய்த வாசகர் பெயர், நேரம், முகவரி உள்ளிட்ட, அடிப்படை தகவல்கள் தொகுக்கப்படும். இதன்மூலம், நுால்கள் தொலைந்து போனாலும், வாசகர்கள் தான், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இதோடு, புத்தகத்தின் அனைத்து தகவல்களையும் தொகுப்புகளாக சேகரிக்கும் பணி நடப்பதால், அரிய நுால்களின் களஞ்சியம் உருவாக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட நுாலகத்துறை அதிகாரி (பொறுப்பு) கார்த்திகேயன் கூறுகையில், ''தமிழக அரசு சார்பில், நுாலகத்துறைக்கு அளிக்கும் அரிய நுால்கள் தொலைந்து போனால், மாற்று பிரதி கிடைக்காவிடில், சிறந்த நுால்களை இழக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம். இதை தடுக்க பார்கோடு வசதியோடு, தகவல் தொகுக்கப்படுகிறது. இதற்கான சிறப்பு மென்பொருள், ஆங்கில நுால்களை எளிதில் தொகுத்து விடுகிறது.
''தமிழ் மொழி நுால்களை தொகுப்பதில் சற்று சிரமம் இருப்பதால், மென்பொருளில் சில மாற்றங்கள் செய்து, தகவல் தொகுக்கும் பணிகள் நடக்கின்றன. இதுவரை, 10 ஆயிரம் புத்தகங்களின்
தகவல்கள் பிரத்யேக களஞ்சியமாக உருவாக்கப்பட்டுள்ளன.
''மேலும், சென்னை, கன்னிமாரா நுாலகத்தில், செய்தித்தாள்களின் தகவல்களை தொகுக்கும் பணிகள் நடக்கின்றன. இத்தகவல்களை, கோவை மாவட்ட வாசகர்களும் பெற்று பயனடைய, தகவல்கள் பகிருமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில், செய்தித்தாள்களின் தகவல் களஞ்சியமும் சேகரிக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment