நடுவண் அரசின் புதிய கல்விக் கொள்கை சமூகநீதிக்கு எதிரானது மட்டுமல்ல, சிறார் மற்றும் வளரிளம் குழந்தைகளின் உரிமைகளுக்கும் எதிரானது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது, கல்வி முறையினுள் மதத்தை இணைப்பது, குலக்கல்வி முறையினை திரும்பக் கொண்டு வருவது, சிறுபான்மையின
கல்வி நிறுவனங்களின் உரிமைகளைப் பறிப்பது, மொழிக் கொள்கைக்கு எதிரானது என்று சொல்லிக் கொள்ள இடமிருக்கிற ஒரு கல்விக் கொள்கை, தனக்குத் தேவையான ஒரு கல்வி முறைமையை விரும்புகிற பெருமுதலாளிகள் இக்கொள்கையை யாத்துள்ளனரோ எனும் அளவுக்கு இக்கொள்கையில் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
மெக்காலே கல்விமுறை தனக்குத் தேவையான அலுவலர்களை மனனம் செய்யும் முறையிலிருந்து தேர்ந்தெடுக்க பிரிட்டிஷ் இந்தியாவில் இப்போது இருக்கும் கல்வி முறையை நடைமுறைபடுத்தியது. பல கமிஷன்கள் போடப்பட்டாலும் இப்போது இருக்கிற கல்வி முறை சுயநலத்தை முன்வைக்கிற, வரலாற்றைத் திரிக்கிற, புதிய சிந்தனைகளை உருவாக்காத ஒன்றாகவே இருந்து வருகிறது. மொழிகள் பலவாறாக உள்ள இந்தியாவில், கல்விக் கொள்கை இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியாக இருப்பது நீதியாக இருக்க முடியாது. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை நெருக்கடி நிலையின்போது எந்த விவாதமுமின்றி பொதுப்பட்டியலுக்குக் கொண்டு சென்றது காங்கிரஸ் அரசு. இப்போது அது நேரடியாக மத்தியப் பட்டியலுக்கு செல்கின்ற வகையில் இந்தக் கல்வி கொள்கை இருக்கிறது.
கல்வி என்பது அரசு தன் மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவை என்பதை புறந்தள்ளி விட்டு, இந்த அரசு ‘சீர்திருத்தம்’ என்கிற பெயரில் பின்னோக்கி நாட்டை இழுத்துச் செல்கிறது. இக்கல்வி கொள்கை எந்த வகையிலும் நல்ல சிந்தனைப் போக்குக்கு வித்திடாது. உலக மயத்துக்கு ஏற்ற வகையில், அறிவார்ந்த பொருளியல் - சமூகத் தேவைக்கேற்ற வகையில் இக்கொள்கை முன்னோக்காகச் செய்யப்பட்டுள்ளதாக அரசு சொல்கிறது. பள்ளிகளிலேயே தொழில்நுட்பத் திறனையும் வளர்க்க இக்கொள்கை ஏதுவானதாக இருக்கும் என்றும் ஆசிரியர் மேம்பாடு, பணி நிலை முன்னேற்றம், பழங்குடி மாணவர்களின் கல்வி மேம்பாடு, தலைமை பதவிகளுக்கு மாற்று வரையறை என்று நல்ல அம்சங்கள் உள்ளதாகத் தோற்றமளிக்கிறது. ஆனால், நாட்டையும் கல்வியையும் பல ஆண்டுகளுக்குப் பின்நோக்கி இழுத்துச் செல்வதாக உள்ளது என்பதுதான் உண்மை.
இடை நிற்றலுக்கு மாற்றாக, தொழிற்கல்வியை முதன்மைப்படுத்துகிற இக்கல்விக் கொள்கை... கல்வி என்பது, பணிக்காகவே என்று மறைமுகமாகச் சொல்கிறது. கல்வி என்பது தனிமனித சிந்தனையையும், ஒழுக்கத்தையும், அறிவையும் அறத்தையும் வலியுறுத்துவதாக இருக்க வேண்டும் என்கிற நெறியிலிருந்து விலகிச் செல்கிறது. குறிப்பாக நாட்டில் நிலவும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவேண்டிய அரசு, பள்ளிகளிலேயே இம்முறைக்கு, அடித்தளமிடுகிறது. பத்தாம் வகுப்பில் A, B என்று தரம் பிரிக்கும் இத்திட்டம், ஆங்கிலம், கணிதம், அறிவியலை விரும்பினால் தொடரலாம் அல்லது தொழிற்கல்வியைத் தொடரலாம் என்கிறது. இப்பாடங்களை இந்திய அளவில் பொதுவாக வைக்கலாம் என்கிறது. இது சாத்தியமற்றது. மேலும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள மக்களை அதே நிலையில் வைத்திருக்கவே இக்கல்விக் கொள்கை உதவுமே ஒழிய, சமூக மேம்பாட்டுக்கு உதவாது. மேலும், பொருளாதார அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கலாம் என்பது இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கிறது. அது சமூகநீதியைத் தகர்க்கிறது. தமிழ்நாட்டு மாணவர்களை இது அதிகம் பாதிக்கும். கேந்திர வித்யாலயா, நேரு நவோதயப் பள்ளிகளைத் தொடங்கப்போகும் இக்கொள்கை, பழங்குடி மக்களுக்கானப் பாடத்திட்டத்தை எவ்வாறு உருவாக்குவதாகச் சொல்ல முடிகிறது? மாணவர்களைத் தரம் பிரித்து, மறைமுகமாகக் குலக்கல்வியை ஊக்குவிக்கும் இம்முறைமை எவ்வாறு ஏற்றத்தாழ்வை ஒழிக்கும்? ஆசிரியர் மேம்பாடும் மேலாண்மையும் என்ற பெயரில், ஆசிரியர்களைக் கண்காணிப்பு நெருக்கடியில் வைக்கிறது.
தன்னாட்சி கொண்ட ஆசிரியர் தேர்வு வாரியம் அமைத்து ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, திறனறிக் கண்காணிப்பும் கொண்டு வரப்படும் என்பது பொதுப் புத்திக்குச் சரியாகவே படும். ஆனால், குரு, பாத பூஜை செய்யச்சொல்லும் பாஜக, இப்படியா ஆசிரியர்களை நடத்தவேண்டும்? பாஜக அரசு, ஆசிரியர்களை வெறும் வேலையாட்களாகப் பார்ப்பதை அவர்களின் மீதான கண்காணிப்புகளை எவ்வாறு ஏற்க முடியும்?
ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியையோ, வட்டார மொழியையோ விரும்பினால் மாநிலங்கள் வழங்கலாம். இதனுடன் ஒழுக்கக் கல்வியும் வழங்கப்படும். சமஸ்கிருதத்தின் முதன்மையினைக் கருத்தில்கொண்டு அதனைப் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கற்பிக்க தாராளமான வசதி செய்யப்படும் என்று சொல்வது, கல்வியை முழுக்க இந்து மயமாக்க முயல்வதின் அரசியல்.
வட்டார மொழிகளை விரும்பினால் பயிற்று மொழியாக்கலாம். சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்குவோம் என வெளிப்படையாக சொல்கிறது. பள்ளிகளை ஆசிரமங்களோடு இணைத்தல், பள்ளிகளில் யோகா என்று இவை அனைத்தையும் பார்த்தால் கல்விக் கொள்கையில் காவிமயம் இருப்பது நன்றாகவே தெரியும்.
உயர்கல்விக் குழுக்கள் அமைக்கப்படும் IES (தேசிய கல்விப்பணி), நடைமுறைபடுத்தப்படும், தனியார் பள்ளிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தீர்ப்பாயங்கள் நிறுவப்படும் என்று வெறும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை கொள்கை என்று ஏற்க இயலுமா? இதற்கெல்லாம் மேலே சென்று கல்வியில் தனியார் நிதி FDI வரை இக்கொள்கை அனுமதிக்கிறது.
இக்கொள்கையின் மொத்த சாராம்சம், தனியார் கல்வியை நடைமுறைப்படுத்துவது, பன்னாட்டு நிதியை கல்வியிலும் அமல்படுத்துவது, குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டு வருவது, மாணவர்களின் ஒற்றுமையைக் குலைப்பது, சமஸ்கிருதத் திணிப்பின் மூலம் கல்வியைக் காவிமயமாக்குவது, பிறமொழிகளைப் புறக்கணிப்பது, மாநில உரிமைகளைப் பறிப்பது, ஆசிரியர்களை வெறும் ஊழியர்கள் என்ற நிலைக்குத் தள்ளுவது. இவைதான்.
இக்கொள்கை முழுமூச்சாக எதிர்க்கப்பட வேண்டியது என்பதில் மாற்றில்லை. கருத்துக்கேட்புகள், கண்துடைப்பாக இருக்கிறது. கல்வியாளர்களும், சமூக மாற்றத்தை விரும்புபவர்களும் இதனை பொதுமக்களுக்கு விளக்கி வரும் தலைமுறையைக் காக்க வேண்டும். இக்கொள்கையில் புதுமையும் இல்லை. கல்வியும் இல்லை. கொள்கையும் இல்லை.
கட்டுரை ஆசிரியர், பேராசிரியர் மற்றும் ‘இளந்தமிழகம்’ என்ற அமைப்பின் உறுப்பினர். கள செயல்பாட்டாளரும் கூட.
No comments:
Post a Comment