1ம் வகுப்பு முதல் கணினி சொல்லிக்கொடுங்க.. அரசு பள்ளி மாணவர்களும் திறன் பெறட்டும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 26, 2017

1ம் வகுப்பு முதல் கணினி சொல்லிக்கொடுங்க.. அரசு பள்ளி மாணவர்களும் திறன் பெறட்டும்

1ம் வகுப்பு முதல் கணினி சொல்லிக்கொடுங்க.. அரசு பள்ளி மாணவர்களும் திறன் பெறட்டும்
அரசு பள்ளி மாணவர்களுக்கும் கணினி கல்வி வேண்டும் என்று தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வெ. குமரேசன் கோரியுள்ளார்.

        சென்னை: அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பும் முதல் 12ம் வகுப்பு வரை கணினிப் பாடங்களை கற்பிக்க வேண்டும் என்று கணினி ஆசிரியர்கள் கோரியுள்ளனர். மேலும், அச்சடிக்கப்பட்டு குடோனில் கிடக்கும் 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள கணினி பாடப் புத்தகத்தை மாணவர்களிடம் வழங்கவும் அவர்கள் கோரியுள்ளனர்.

         தமிழ்நாட்டில் 1992 ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கணினி பட்டப்படிப்பை படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் கணினி ஆசிரியர்கள் மட்டும் 40 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 11 ஆயிரம் பேரும், பெண்கள் 29 ஆயிரம் பேரும் இருக்கிறார்கள். இவர்களது ஒரே கோரிக்கை தனியார் பள்ளிகளில் இருப்பது போன்று அரசு பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வித் திட்டத்தில் கணினியையும் சேர்க்க வேண்டும் என்பதுதான்.

ஏற்கனவே, சமச்சீர் கல்வித் திட்டத்தில் 6 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை கணினியை ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் அதற்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அதனை மாணவர்களுக்கு வழங்காமல் அந்தப் பாடத்தை நடத்தாமல் உள்ளது தமிழக அரசு. இதுகுறித்து மேலும் பல தகவல்களை ஒன் இந்தியாவிடம் பகிர்ந்து கொள்கிறார் வெ.குமரேசன்.

குடோனில் கணினிப் புத்தகம்

சமச்சீர் கல்வியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்திற்கான திட்டம் வகுக்கப்பட்டு பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன. என்றாலும் அவற்றை மாணவர்களுக்கு இதுவரை வழங்காமல் குடோனிலேயே குப்பை போல கிடக்கிறது. இதற்கு காரணம் அவற்றை சொல்லித் தர அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லை.

900 கோடி எங்கே?

கணினி பாடத்திற்காக மத்திய அரசு தமிழக அரசுக்கு 900 கோடி ரூபாய் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலமாக ஒதுக்கியுள்ளது. ஆனால் அந்த பணத்தை செலவு செய்யக் கூட தமிழக கல்வித் துறைக்கு தெரியவில்லை. அது அப்படியே மத்திய அரசிற்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளது. இதனால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு சென்று சேர வேண்டிய தரமான கணினிக் கல்வி மறுக்கப்படுகிறது.

கணினி ஆய்வகங்கள்

தமிழகத்தில் 21 லட்சம் மாணவர்களுக்கு தமிழக அரசு மடிக்கணினியை வழங்கியுள்ளது. என்றாலும் பள்ளிக் கூடங்களில் கணினிப்பொறி ஆய்வகங்கள் முறையாக இல்லை. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்கள் அமைத்துக் கொடுத்தால்தான் மாணவர்கள் திறம்பட கற்க முடியும். வெறும் மடிக்கணினியை கொடுத்து என்ன பயன்?

கணினி ஆசிரியர்கள்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் இருக்கிறது. என்றாலும், அந்தப் பாடங்களை நடத்துவதற்கு முறைப்படி கணினி பிரிவில் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கிறது. அதே போன்று கடந்த பத்து வருடங்களாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடப்பிரிவு சுத்தமாக இல்லை. அங்கேயும் கணினி அறிவியல் பாடப்பிரிவு கொண்டுவர வேண்டும். ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

இணையாக வளர..

தமிழக அரசு கணினி கல்வியில் தனி கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் கணினி அறிவைப் பெறுவது போன்று அரசுப் பள்ளி மாணவர்களும் பெற முடியும்.

கட்டாயக் கல்வி

தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் கணினிக் கல்வி கட்டாயக் கல்வியாக உள்ளது. வரும் கல்வியாண்டில், ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு குடோனில் தூங்கிக் கொண்டிருக்கும் கணினிப் பாடப் புத்தகங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி கணினி கல்வியை நடைமுறைபடுத்த வேண்டும் என்று குமரேசன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment