நிரந்தரச் சட்டத்துக்கும் அவசர சட்டத்துக்கும் வேறுபாடு என்ன? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 22, 2017

நிரந்தரச் சட்டத்துக்கும் அவசர சட்டத்துக்கும் வேறுபாடு என்ன?

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கும் வகையில் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதை ஏற்காமல் தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் தொடர்கிறது.

இந்தச் சூழலில் அவசரச் சட்டத்துக்கும், நிரந்தரச் சட்டத்துக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்க்கலாம். விலங்குகள் வதைச் சட்டத்தின் கீழ் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள், மத்திய, மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் வருகின்றன. அதில் மத்திய அரசு நிரந்தர திருத்தம் செய்ய வேண்டும் என்றால், வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு, நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட வேண்டும். விவாதத்துக்குப் பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அது நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகே அது நிரந்தரச் சட்டமாகும். அதற்குப் பதிலாக மத்திய அரசு அவசரச் சட்டத்தை பிறப்பிக்க இயலும் என்றாலும் அது நாடு தழுவிய அளவில் பொருந்தக் கூடியதாக இருக்கும்.

ஆனால், இப்போதைய அவசியத் தேவை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்குவதுதான் என்பதால் மாநில அரசே அவசர சட்டம் இயற்ற மத்திய அரசு பரிந்துரை செய்தது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு அவசர சட்டம் இயற்றினால், அதற்கு அவசர வழக்கு தொடர்ந்து, விலங்குகள் நல அமைப்புகள் தடை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, தமிழக அரசு இயற்றியுள்ள அவசரச் சட்டமே போதுமானது என்று சட்ட நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இது 6 மாதம் வரை செல்லும் இந்த அவசரச் சட்டம் நாளை தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே நிறைவேற்றப்படும் என தமிழக அரசு உறுதி அளித்திருக்கிறது. அதன்படி, சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் அளித்து விட்டால், அவசர சட்டம் நிரந்தர சட்டமாகி விடும் என ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு உள்ளிட்ட பல்வேறு சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வரலாம் என்ற அச்சமே போராட்டத்தை தொடரக் காரணமாக கூறப்படுகிறது.

ஆனால், கடந்த ஆண்டில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவில்லை, மாறாக, காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளை நீடித்த நிலையில், கலாசார அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிப்பதாக அறிவிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது. அதற்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்காத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் விலங்குகள் நல அமைப்புகள் அதற்குத் தடை வாங்கின. ஆனால், அந்த அறிவிக்கையை இப்போதைய அவசர சட்டத்துடன் ஒப்பிட முடியாது. இது நாளை சட்டப்பேரவையில் நிறைவேறி விட்டால், ஜல்லிக்கட்டு நடப்பதற்கான நிரந்தரச் சட்டமாக மாறிவிடும் என சட்ட நிபுணர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். எனவே, போராட்டத்தை தொடர்பவர்களிடம் இதுபற்றி விளக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

No comments:

Post a Comment