மெரினாவில் ஜல்லிக்கட்டுப் போராட்டக்காரர்கள் வெளியேற்றம்: போலீஸார் குவிப்பு; போர்க்களமானது போராட்டக் களம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 23, 2017

மெரினாவில் ஜல்லிக்கட்டுப் போராட்டக்காரர்கள் வெளியேற்றம்: போலீஸார் குவிப்பு; போர்க்களமானது போராட்டக் களம்

கடற்கரைக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் சென்னை காவல்துறையால் முடக்கம்
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில்
ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். கடற்கரைக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு கோரியும், பீட்டா அமைப்புக்குத் தடை கோரியும் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் வழங்கினார். இதனால், ஜல்லிக்கட்டு மீதான தடை உடனடியாக நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மதுரை புறப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் எனக் கூறிச் சென்றார்.
ஆனால், மதுரை அலங்காநல்லூர், சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போராட்டம் வாபஸ் பெறவில்லை. ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கொண்டுவரும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
போராட்டத்தைக் கைவிட வேண்டுகோள்
மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட பலர் வேண்டுகோள் விடுத்தனர்.
இளைஞர்கள் போராட்டத்தை மார்ச் 31 வரை தள்ளிவைக்க வேண்டும் என்று காங்கேயம் காளை அறக்கட்டளை தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த செய்தியாளர் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்குப் பிறகும் இளைஞர்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்தனர்.
போர்க்களமான மெரினா
இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலையில் மெரினாவில் நூற்றுக்கணக்கான போலீஸார் திரண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். மாணவர்கள், இளைஞர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தத் தொடங்கினர். முதலில், பெண்கள், குழந்தைகள் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சிலர் தாங்களாகவே வெளியேறினர். ஆனால், போராட்டக்காரர்கள் பலரும் கடலை நோக்கி ஓடினர். அங்கேயே மனிதச் சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மெரினா கடற்கரை போராட்டக்களம் சில மணித்துளிகளில் போர்க்களமானது.
தற்கொலை மிரட்டல்
மாணவர்கள் சிலர் கடலில் இறங்கி போராடி வருகின்றனர். காவல்துறையினர் நெருங்கினால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டி வருகின்றனர்.
படகுகள் மூலம் உணவு, தண்ணீர்
சென்னை மெரினாவில் கடலுக்கு அருகே மனிதச் சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு படகுகள் மூலம் உணவு, குடி தண்ணீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், காவல்துறையினர் தங்களை நெருங்கவிடாமல் போராட்டக்காரர்கள் மணலை வாரி வீசுவதாகக் கூறப்படுகிறது.
பறக்கும் ரயில் சேவை ரத்து
மெரினாவில் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மீண்டும் கூட்டம்கூடுவதை தடுக்கும் வகையில் சென்னை வேளச்சேரி - கடற்கரை இடையேயான பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment