உச்சநீதிமன்றத்தில் ஆதார் தொடர்பான வழக்கு விசாரணை தாமதமானதை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், வங்கிகணக்கு, பான் கணக்கு உள்ளிட்டவுடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என அடுத்தடுத்து மத்திய அரசு அறிவித்தது. இதற்கென காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
ஆதார் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு விசாரணைகள் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் எடுக்கப்படும் என உச்சநீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஆதார் எண்ணை நலத்திட்டங்களில் இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேஸ் மானியம் உள்ளிட்ட பல நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 31 கடைசி தேதியாக இருந்தது. இப்போது டிச.31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை பயன்படுத்தி சிலர் வருமான வரி ஏய்ப்பு செய்வதை தடுப்பதற்காக, ஆகஸ்ட் 31 தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.
வருமான வரி தாக்கலுக்கு ஆதார் எண் கட்டாயம் எனவும், பான் கார்டு பெற ஆதார் எண் தேவை என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஆதார் எண் வைத்திருப்பவர்கள், அந்த எண்ணை பான் கார்டுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதே சமயம் ஆதார் எண் இல்லாதவர்களின் பான் கார்டை மத்திய அரசு ரத்து செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில், வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டும் என்றும், அவ்வாறு இணைக்காவிட்டால் வங்கிக் கணக்குகள் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்ட நிதி மசோதாவின் படி, வருமான வரி கணக்கு தாக்கலின் போது ஆதார் எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை பெறவில்லை. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் இதற்கான காலக்கெடு முடிவடைவதாக இருந்த நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
2017- 18ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமானால் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கப்படுவது அவசியம். தற்போதைய புதிய அறிவிப்பின் படி ஆதாரை பான் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 31 ஆகும். அப்படி இணைக்காதவர்கள் பின்னர் வருமான வரி தாக்கல் செய்யும் போது அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை வரும்.
ஆதார் - பான் கார்டு இணைப்புக்காக வருமான வரித்துறையின் இணையதளத்தில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. www.incometax, indiaefiling.gov.in என்ற இணையதள பக்கத்தில் நுழைந்து முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஆதார் - பான் இணைப்புக்கான பக்கத்தில் விவரங்களை அளித்து இணைத்து கொள்ளலாம். பான் மற்றும் ஆதாரில் உள்ள பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.
x
No comments:
Post a Comment