அரசு பள்ளிகள் கல்வி தரம் உயர மாநிலங்களுக்கு உதவ புது திட்டம் !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 23, 2017

அரசு பள்ளிகள் கல்வி தரம் உயர மாநிலங்களுக்கு உதவ புது திட்டம் !!

அரசு பள்ளிகள் கல்வி தரம் உயர மாநிலங்களுக்கு உதவ புது திட்டம் !!மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்துவதை தடுக்கும் வகையில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவது குறித்து,
மாநிலங்களுடன் இணைந்து செயல்பட, மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்து வருகிறது. புதிய திட்டம் குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர், 

நமது நாளிதழுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டி:

ஐ.நா.,வின் 'யுனெஸ்கோ' எனப்படும், ஐ.நா., கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் புள்ளி விபரங்களின்படி, நாட்டில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி படிக்க வேண்டிய வயதில் உள்ள, 4.7 கோடி பேர், படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். 'நிடி ஆயோக்' நடத்திய ஆய்வில், அருணாச்சல பிரதேசம், பீஹார், ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, ராஜஸ்தான் மற்றும் உ.பி.,யில், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மதிய உணவுக்காக மட்டுமே, பள்ளிக்கு வருவோரும் உள்ளனர். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும்.
அந்தந்த மாநிலத்தின் தன்மைக்கு ஏற்ப, இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த உள்ளோம். தற்போது, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும், உ.பி., அரசுடன், இதற்கான ஆலோசனைகள் நடக்கின்றன. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை விட, வட மாநிலங்களில், கல்வித் தரம் மோசமாக உள்ளது. அதனால், வட மாநிலங்களில், முதலில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். மாநில அரசு களுடன் ஆலோசனை நடத்தி, அந்தந்த மாநிலத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு தேவையான நிபுணர்களின் ஆலோசனைகள் வழங்கப்படும்; தேவைப்பட்டால், நிதியும் ஒதுக்கப்படும்.
அரசு பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்தால், மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்துவதை தடுக்க முடியும். அது தான், நாட்டு மக்களுக்கு நாம் செய்யும் நியாயம். இத்திட்டத்தின் கீழ், கற்பிக்கும் திறனை வளர்க்க, ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு தரப்படும். மாணவர்களின் கற்கும் திறனை வளர்ப்பதற்கான வழிமுறைகள் அடங்கிய கையேடுகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். இதுதவிர, துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான, 'டிப்ளமா' படிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது; இதற்கு பதிவு செய்வதற்கு, செப்., 15 வரை அவகாசம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் கே.வி., பள்ளிகள் : மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், நாடு முழுவதும், 1,094 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், வெளிநாடுகளில், மூன்று பள்ளிகளும் இயங்குகின்றன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, அதிகளவில் துவக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.
அதனால், கூடுதல் பள்ளிகள் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ''அதிக முதலீடுகள் இல்லாமல், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்,'' என்றார், பிரகாஷ் ஜாவடேகர்.

No comments:

Post a Comment