குழந்தைகளுக்கு எதையும் தெளிவாக கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குள் அதைப் பற்றிய கேள்விகள் எழும். சிந்தனை திறனும் மேம்படும். கேள்வி கேட்கும் சுபாவம்தான் சிந்தனைகளின் பிறப்பிடம். ஆதலால் குழந்தைகளை கேள்வி கேட்பதற்கு ஊக்கப்படுத்தவேண்டும். அவர்களுக்கு விடுகதைகள் சொல்லிக்கொடுக்கலாம். அவைகள் கேள்விகளுக்கான விடைகளை தேடி கண்டுபிடிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தும். தெரிந்த விஷயங்களுடன் ஒப்பிட்டு பார்த்து சிந்திக்கும் ஆர்வத்தையும் தூண்டும்.
அதுபோல் குழந்தைகளிடம் ஓவியம் தீட்டும் ஆர்வத்தையும் ஏற்படுத்த வேண்டும். தெரிந்த விஷயங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டு பார்த்து சிந்திப்பதற்கு ஓவிய கலை கைகொடுக்கும். அவர்கள் பார்த்த விஷயங்களை கற்பனையாக மனதுக்குள் பதிவு செய்து ஓவியமாக தீட்டுவார்கள். ஒவ்வொரு குழந்தைகளிடமும் ஓவியம் வரையும் விதம் மாறுபடும்.
ஒருசில குழந்தைகள் கோடுகளாக கிறுக்கிக் கொண்டிருப்பார்கள். சிலர் வண்ணங்களை தீட்டுவதில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் மனதுக்குள் உள்வாங்கிய காட்சிகளை சித்திரமாக வெளிப்படுத்துவதில் மாறுபட்ட கற்பனைகள் வெளிப்படும். மனதுக்குள் பதிந்த கற்பனையை ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் விதத்தில் மாறுபாடு தோன்றலாம்.
ஆனாலும் பார்த்த காட்சிகளை ஒரே சாயலில் ஓவியமாக கொண்டு வருவதற்கு மெனக்கெட்டிருப்பார்கள். அவர்கள் ஓவியங்களை தீட்டும் விதத்தை கூர்ந்து கவனித்தாலே அவர்கள் மனதில் இருக்கும் எண்ண ஓட்டங்களை ஓரளவு யூகித்து விடலாம். பார்த்த, தெரிந்த விஷயங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டு பார்த்து சிந்திக்க தூண்டும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் ஓவியக் கலையை சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment