யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம்,
ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக வந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நாடு முழுவதும், 115 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள், அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,வால் திருடப்படுவதாக, சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியானது.இதை, ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது.
இதுகுறித்து, ஆதார் ஆணையம் வெளியிட்ட அறிக்கை விபரம்:
'பயோமெட்ரிக்' முறையில் தகவல் சேகரிக்கும் தொழில் நுட்பம், இந்தியாவில், பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில், கடுமையான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தொழில் நுட்பத்தில், மக்களிடம் சேகரிக்கப்படும் தகவல்கள், மிகவும் பாதுகாப்பாக உள்ளன.
இந்த தகவல்கள் திருடப்படுவதாக கூறப்படுவதில் உண்மை கிடையாது. இத்தகைய தகவல், உள்நோக்கத்துடன் பரப்பப்பட்டு வருகிறது. ஆதார் தகவல் சேகரிப்புக்காக, பயோமெட்ரிக் சாதனங்களை பயன்படுத்தும் முன், முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன.
இதற்கு, எஸ்.டி.கியு.சி., எனப்படும், தர பரிசோதனை முறை பயன்படுத்தப்பட்டு, சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இதைத் தவிர, மேலும் பல பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்படுவதால், தனிநபர்களின் தகவல்களை, யாரும், எந்த வகையிலும், திருடவே முடியாது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment