எல்கேஜி முதல் பிளஸ்2 வகுப்பு வரை எந்தவித நிபந்தனையுமின்றி மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு ஈடாக ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதுடன், எல்கேஜி வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களையும் அழகான சீருடைகள், காலணிகள், புத்தகப்பை, பாடப்புத்தகங்கள், கையேடுகள் என்று வழங்கி வருகிறது. மேலும் மேல்நிலைக்கல்வி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, கணினிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இதைதொடர்ந்து ஒரே வளாகத்தில் எல்கேஜி முதல் பிளஸ்2 வரை வகுப்புகளை கொண்ட பள்ளிகள் என்ற நிலையை ஏற்படுத்த அரசு மேல்நிலைப்பள்ளிகளின் அருகில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை அப்பள்ளிகளுடன் இணைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே சிபிஎஸ்இக்கு இணையான பாடத்திட்டத்தை பள்ளிக்கல்வியில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அதற்கேற்ப அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று மாநிலம் முழுவதும் முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்காக ஏப்ரல் 1ம் தேதி முதலே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கையின் போது பெற்றோரிடம் எவ்வித நிபந்தனைகள், தேவையற்ற கேள்விகளையும் எழுப்பாமல் மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்கள் பள்ளி அமைந்துள்ள பகுதியில் உள்ள பெற்றோர்களை சந்தித்து எல்கேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.உயர்நிலைப்பள்ளிகள் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், தனியார் நர்சரி பள்ளிகள் ஆகியவற்றில் இருந்து 5ம் வகுப்பு முடிக்கும் மாணவர் பட்டியலை கேட்டுப்பெற வேண்டும். 9ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உயர்நிலைப்பள்ளிகளும், மேல்நிலைப்பள்ளிகளும் தங்கள் அருகில் உள்ள அரசு, தனியார் நடுநிலைப்பள்ளிகளில் 8ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களின் பட்டியலை கேட்டு பெற வேண்டும்.
மேல்நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு, தனியார் உயர்நிலை, மெட்ரிக் பள்ளிகளில் 10ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களின் பட்டியலை கேட்டு பெற வேண்டும். இவ்வாறு பெறப்பட்ட பட்டியல்களின் அடிப்படையில் அந்த மாணவர்களை தங்கள் பள்ளியில் சேர்ப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment