அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]
அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களின் வருகைப் பதிவுக்கு ஆதார் எண் இணைந்த பயோமெட்ரிக் முறையை கொண்டு வருவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் அன்னாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில் ஆதார் அடையாளம் என்பது அரசின் மானியம், உதவி போன்ற திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஆதார் சட்டம் பிரிவு 7ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு மாறாக தமிழக அரசு பள்ளிகளில் வருகைப் பதிவிற்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்துள்ளது. இது எங்களின் அடிப்படை உரிமையைப்பாதிக்கும். எனவே, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களின் வருகைப் பதிவிற்கான பயோமெட்ரிக் முறையில் ஆதார் எண்ணை இணைக்கும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கடந்த 4-ம் தேதி மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதில் தருமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
இந்நிலையில், இன்று இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஊதியம் பெறும் அரசு ஆசிரியர்கள் பொதுமான தேர்ச்சி விகிதம் காட்டாததால் பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டனர் என அதிருப்தி தெரிவித்தனர். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். பயோமெட்ரிக் முறை விரைவில் செயல்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், கல்வித்துறையில் ஊழல் அதிகரித்துவிட்டதால், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment