1½ லட்சம் பேர் விண்ணப்பம்: ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடும் போட்டி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, April 28, 2015

1½ லட்சம் பேர் விண்ணப்பம்: ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடும் போட்டி

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 4500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படும் இந்த வேலைக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். கூடுதல் கல்வித்தகுதி உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்ச வயது 18–ல் இருந்து அதிகபட்சமாக ஒவ்வொரு இனத்தவரை பொறுத்து சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அந்தந்த மாவட்டங்களில் சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கு விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

கடந்த 24–ந் தேதி முதல் விண்ணப்பம் வினியோக்கப்படுகிறது. மே 6–ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படும்.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் சேவை மையங்களில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

அரசு வேலை, நிலையான சம்பளம் என்பதால் இந்த பணிக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மையங்களில் கூட்டம் அலை மோதுகிறது. ஆண்– பெண் பட்டதாரிகள் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர்.

விண்ணப்பங்களை பெறவும் சான்றிதழ்களை சரிபார்க்கவும், புகைப்படம் எடுக்கவும் வரிசையில் காத்து நிற்கிறார்கள். சேவை மையத்தில் குறைந்த அளவில் ஊழியர்கள் இருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

கூட்டம் அதிகரித்து வருவதால் டோக்கன் முறையில் விண்ணப்பதாரர்கள் வரிசையில் நிற்க வைக்கப்படுகின்றனர். சென்னையில் 8 இடங்களில் ஆண் – பெண் என தனியாக சேவை மையம் உள்ளது.

இவற்றில் கூட்டம் நிரம்பி வழிவதால் அங்குள்ள ஊழியர்கள் ஒரு மணி நேரம் மட்டும் விண்ணப்பம் வழங்குவதாகவும் அதன் பிறகு மறுநாள் தான் வழங்க முடியும் என்று சொல்வதாக புகார் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் காலி பணியிடங்கள் மிக குறைவாக (33 இடங்கள்) இருப்பதால் போட்டி அதிகமாக உள்ளது. பிற மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மேலும் விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் இல்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.

மே 1 வெள்ளிக்கிழமை, மே தின விடுமுறையாகும். 2 (சனி), 3 (ஞாயிறு) வழக்கமான விடுமுறை நாட்களாகும். தொடர்ந்து 3 நாட்கள் சேவை மையம் செயல்படாததால் விண்ணப்பம் வினியோகிக்கவோ சமர்ப்பிக்கவோ இயலாது.

எனவே விண்ணப்பிக்க கூடுதலாக கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று வேலைக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள், பட்டதாரிகள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் இந்த வேலைக்கு நேற்று வரை ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் விண்ணப்பப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment