ஐ.டி.ஐ., பொறியியல் படித்தோருக்கு ராணுவத்தில் நல்ல வாய்ப்புகள்: பிரிகேடியர் சங்க்ராம் டால்வி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 30, 2015

ஐ.டி.ஐ., பொறியியல் படித்தோருக்கு ராணுவத்தில் நல்ல வாய்ப்புகள்: பிரிகேடியர் சங்க்ராம் டால்வி

உடல் தகுதி, சிந்திக்கும் திறன் மற்றும் திறமைவாய்ந்த இளைஞர்கள், ராணுவத்திற்கு தேவையாக உள்ளனர். தற்போதைய நிலையில், படித்து முடித்தும், முறையான வேலைவாய்ப்பின்றி அவதிப்பட்டுவரும் ஏராளமான ஐ.டி.ஐ. மற்றும் பொறியியல் படித்த மாணவர்களுக்கு, இந்திய ராணுவத்தில் நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளன. இப்பணிகளில், பணிப் பாதுகாப்பு கிடைப்பதோடு, சிறப்பான சம்பளமும் உண்டு.

இதுதொடர்பாக, பிரிகேடியர் சங்க்ராம் டால்வி, சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: ராணுவத்திற்கான இந்த ஆள்சேர்ப்பு முறை, எந்தவொரு இடைத்தரகர்களின் தலையீடு மற்றும் பரிந்துரைகள் இல்லாமல், ஒளிவுமறைவின்றி நடத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கும் முறை, பல கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால், இதில், முறைகேடுகளுக்கு சற்றும் வாய்ப்பிருக்காது. பயோமெட்ரிக் பரிசோதனை, கல்விச் சான்றிதழ்களை பலகட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் இதில் சிறப்பம்சங்களாகும்.

அதிகளவிலான பொறியியல் மாணவர்கள், தமிழகம் மற்றும் ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்தே வெளிவருவதால், 17.5 முதல் 23 வயது வரையிலான இளைஞர்களை கவனத்தில் கொண்டு, இந்த ஆளெடுப்பு நடத்தப்படவுள்ளது. வேறெந்த வேறுபாடும் காட்டப்படாமல், உடல்நலம், மருத்துவப் பரிசோதனை மற்றும் கல்வி ஆகியவற்றின் தகுதியிலேயே ஆளெடுப்பு நடைபெறும். இந்த ஆண்டு, மொத்தம் 6000 பணியிடங்களை நிரப்பவுள்ளோம்.

சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள் மற்றும் என்.சி.சி. சான்றிதழ்கள் வைத்துள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை மற்றும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். பரிந்துரைக்கப்பட்ட, மிகச்சிறந்த தகுதியுடைய விளையாட்டு வீரர்கள், ஹவில்தார் மற்றும் நாயிப் சுபேதார் ஆகிய பணிகளில் நேரடியாக அமர்த்தப்படுவார்கள்.

இத்தேர்வு முறைகளில் தேர்ச்சிபெறும் இளைஞர்கள், நாடு முழுவதுமுள்ள பல்வேறு பயிற்றிடங்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்களுக்கு அங்கே, முதற்கட்ட பயிற்சி அளிக்கப்படும். பின்னர், ராணுவத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கேற்ப, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.

பயிற்சிகாலம் முடிந்து, பணியமர்த்தப்படும் ஒரு நபருக்கு, ரூ.24,000 முதல் ரூ.35,000 வரை ஊதியம் வழங்கப்படும். அதேசமயம், கடுமையான பிரிவுகளில் பணியமர்த்தப்படும் நபர்களுக்கு, ஊதியம் இன்னும் அதிகம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும், இலவச மளிகைப் பொருட்கள், ஆடைகள் மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல, இலவச பயண வசதியும் உண்டு.

ஒவ்வொரு ஆண்டும், ஆண் மக்கள் தொகையில், 10% பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படும். பாதுகாப்பு அமைச்சகத்தின்(ராணுவத்தின்) அட்ஜுடன்ட் ஜெனரலின் கிளையான ஒருங்கிணைந்த தலைமையகம் மற்றும் அதற்கு கீழுள்ள பிற கிளைகளே ராணுவத்திற்கு ஆளெடுக்கும் இந்த முறையை திட்டமிடுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment