விடைத்தாள் திருத்தும் பணிக்கு டேக்கா கொடுத்தவர்களின் விபரங்கள் சேகரிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 30, 2015

விடைத்தாள் திருத்தும் பணிக்கு டேக்கா கொடுத்தவர்களின் விபரங்கள் சேகரிப்பு

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளில் உரிய காரணமின்றி விடுப்பு எடுத்த ஆசிரியர்கள் விவரத்தை, கல்வி அதிகாரிகள் சேகரிக்கின்றனர்.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 20 துவங்கி 25ல் முடிக்க தேர்வுத் துறை அறிவுறுத்தியது. ஆனால் மதுரையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தாமதம் ஏற்பட்டு ஏப்.29 வரை திருத்தும் பணி நீடித்தது.

இதனால் தாமதம் குறித்து தேர்வுத்துறைக்கு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் விடுப்பு எடுத்த ஆசிரியர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்ட அளவில் மொழிப் பாடங்கள் உட்பட மொத்தம் 2.50 லட்சம் விடைத்தாள்கள் மதுரைக்கு வழங்கப்பட்டன. அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் விடுப்பு எடுத்ததால் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதனால் 7 ஆயிரம் மொழிப்பாட விடைத்தாள்கள் சிவகங்கைக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் மதுரையில் பணிக்கு வராத ஆசிரியர்கள் விவரங்களை தேர்வுத் துறை கேட்டுள்ளது. மேலும் மருத்துவ சான்று உட்பட உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து விடுப்பு எடுத்தவர்கள் குறித்தும் விசாரிக்கப்படவுள்ளனர். இதுதொடர்பான விவரங்களையும் தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்க உள்ளோம், என்றார்.

காத்திருப்பு தண்டனை: விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அழைக்கப்படுவர். காலையில் இருந்து மாலை வரை அவர்களை காத்திருக்க வைத்து கடைசி நேரம் விளக்கம் கடிதம் பெற்று எச்சரித்து அனுப்பி வைக்கப்படுவர்.

மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் நேரம், செலவை கணக்கிட்டால் இதுகூட ஒரு வகையில் நுாதன தண்டனைதான். ஆசிரியை என்றால் அவருடன் துணைக்கு ஒருவரும் செல்ல வேண்டியிருக்கும். அவர்களுக்கு இரட்டை செலவு ஏற்படும். இது தேர்வுத்துறையின் டெக்னிக் என்கின்றனர் கல்வி அதிகாரிகள்.

No comments:

Post a Comment