90 மாணவிகளின் கல்விச்சான்றிதழை உடனே வழங்க வேண்டும்: கீழக்கரை பள்ளி நிர்வாகத்திற்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 25, 2015

90 மாணவிகளின் கல்விச்சான்றிதழை உடனே வழங்க வேண்டும்: கீழக்கரை பள்ளி நிர்வாகத்திற்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை செரியன்நகரை சேர்ந்தவர் முகமது அலி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டு இருந்ததாவது:–

என் மகள் ரசியாபானு, கடந்த 2014ம் ஆண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 491 மதிப்பெண் பெற்றார். மத்திய அரசு திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் முஸ்லிம் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச உணவு, தங்கும் வசதியுடன் மேல்நிலைக்கல்வி அளிக்க உள்ளதாக ஐ.எல்.எம்.ஐ. என்ற அறக்கட்டளை அறிவித்தது.இதற்காக, அந்த அறக்கட்டளை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள இஸ்லாமிய மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி அறக்கட்டளையின் கீழ் தேர்வு செய்யப்படும் குழந்தைகளை இஸ்லாமிய மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக, நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. நுழைவுத் தேர்வில் என் மகள் வெற்றி பெற்றதால் தனியார் அறக்கட்டளை என் மகளை இலவச கல்வி அளிக்கும் திட்டத்தின் கீழ் பிளஸ்-1 வகுப்பில் இஸ்லாமிய மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்தது. என் மகளை போன்று 90 மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் அந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.இந்த நிலையில் அறக்கட்டளை நிர்வாகத்துக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், மத்திய அரசு திட்டத்தின் கீழ் படித்து வரும் 90 மாணவிகளின் பெற்றோர்களுடன் அறக்கட்டளை நிர்வாகம் கலந்து ஆலோசித்து அந்த மாணவிகளை தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ஆர்.டி.பி. மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிக்க வைக்க முடிவு செய்தது.அதன்படி மாணவிகள், அவர்களுடைய பெற்றோர்கள் சார்பில் 90 மாணவிகளின் மாற்றுச்சான்றிதழ், எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை வழங்க அறக்கட்டளை நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ஆனால், பள்ளி நிர்வாகம் மாற்றுச் சான்றிதழை அளிக்க மறுத்து விட்டது.இதனால், 90 மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, என் மகளின் மாற்றுச் சான்றிதழ், எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை வழங்க பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.இதேபோன்று அதே பள்ளியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் படிக்கும் தேனி, நாமக்கல், கோவை, நெல்லை, காஞ்சிபுரம், புதுச்சேரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 90 மாணவிகளின் பெற்றோர்களும் மனு தாக்கல் செய்து இருந்தனர்.இந்த மனுக்கள் நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் அருள்வடிவேல் சேகர், எம்.பயாஸ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.அரசு தரப்பில் வக்கீல் குணசீலன் முத்தையா ஆஜராகி பேசுகையில், 90 மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை அணுகும்பட்சத்தில் கல்விச்சான்றிதழை திரும்ப வழங்கப்படும் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளரிடம் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் நேரில் தெரிவித்துள்ளதாக கூறினார்.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 90 மாணவிகளும் வேறு பள்ளியில் சேருவதற்கு வசதியாக எந்தவித கால தாமதமும் இல்லாமல் அவர்களது கல்விச் சான்றிதழ்களை கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி முதல்வர், தாளாளர் ஆகியோர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment