தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தணிக்கை செய்த பிறகே நிதி வழங்கவேண்டும்: ராமதாஸ் அறிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, May 22, 2015

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தணிக்கை செய்த பிறகே நிதி வழங்கவேண்டும்: ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கல்வி பெறுவதற்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் கடந்த 2009–ம் ஆண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25சதவீதம் இடங்கள் அப்பள்ளி அமைந்துள்ள பகுதிகளிலுள்ள நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாக ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை இந்தச் சட்டம் இன்று வரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக பணக்கார மாணவர்களைக் கொண்டு இந்த இடங்களை நிரப்பும் தனியார் பள்ளிகள், அவ்வாறு சேர்க்கப்பட்ட அனைவரும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று ஆவணங்களில் பதிவு செய்து விடுகின்றன. இந்த மோசடியை புள்ளி விவரங்களுடன் நான் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறேன்.

இந்த நிலையில், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் படி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணம் சுமார் ரூ.150 கோடியை தமிழக அரசு வழங்கவில்லை என்றும், இதனால் நடப்பாண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் மாணவர்களைச் சேர்க்கப்போவதில்லை என்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் அரசுக்கு மிரட்டல் விடுத்தன.

இதையடுத்து கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி மாணவர்களைச் சேர்த்ததற்காக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.97.04 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்யும் படி பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த 5ஆம் தேதி கடிதம் எழுதினார். ஆனால், அக்கடிதத்தை மத்திய அரசு பொருட்படுத்தாத நிலையில், தமிழக அரசே அதன் சொந்த நிதியிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு ரூ.97.05 கோடியை வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர் எண்ணிக்கை தனியார் பள்ளிகள் அளித்த தகவல்களின் அடிப்படையிலானது தானே தவிர, அரசு அமைப்பால் தணிக்கை செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது அல்ல.

கல்வி உரிமை சட்டப்படி மாணவர்களைச் சேர்த்ததில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இந்த 25 சதவீதம் ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவினருக்கு பதிலாக பணக்கார மாணவர்களை சேர்த்து தவறாக கணக்குக் காட்டப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாற்றுகள் எழுந்து வரும் நிலையில், அவற்றை புறக்கணித்துவிட்டு தனியார் பள்ளிகள் தந்த விவரங்களை அப்படியே ஏற்று பணம் வழங்கக்கூடாது.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் தவறாக கணக்கு காட்டி சேர்க்கப்பட்ட மாணவர்களிடம் ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது அவர்களுக்காக அரசும் கட்டணம் செலுத்துவது தவறாகும்.

அதுமட்டுமின்றி, ஒன்றாம் வகுப்பு முதல் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்; அப்போதிலிருந்து தான் தனியார் பள்ளிகளுக்கு பணம் வழங்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி மழலையர் வகுப்புகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கு பணம் வழங்குவது சரியல்ல.

எனவே, கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் நடந்ததாக கூறப்படும் மாணவர் சேர்க்கை குறித்து நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் அடங்கியக் குழுவைக் கொண்டு விரிவானத் தணிக்கை நடத்தப்பட வேண்டும். அதன்பிறகே, தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment