மாணவர்களின் உணவுப் பழக்கம் எப்படி இருக்க வேண்டும்? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, May 29, 2015

மாணவர்களின் உணவுப் பழக்கம் எப்படி இருக்க வேண்டும்?

பள்ளி செல்லும் அவசரத்தில் காலை உணவு பிடிக்கவில்லை என நழுவிச் செல்லும் பிள்ளைகளின் கவனமும் பாடத்தை விட்டு நழுவிச் செல்லும் என்கிறார், மதுரையைச் சேர்ந்த உணவு நிபுணர் முருகேஸ்வரி.

மொறுமொறு உணவுக்கு விடைகொடுப்பது குறித்து அவர் கூறியதாவது: பள்ளி செல்ல ஆரம்பித்த பின் ’என் பிள்ளை சாப்பிடாமல் செல்கிறான்’ என புகார் சொல்பவர்கள் அதிகம். எக்காரணம் கொண்டும் காலை உணவை தவிர்க்கக்கூடாது. சில பள்ளிகளில் ’ஷிப்ட்’ முறை இருந்தால் வெகு சீக்கிரமாக செல்ல வேண்டும். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு என்பது கனவாக இருக்கும். உணவை தவிர்க்கும் போது மிக நீண்ட இடைவெளி ஏற்படுவதால் உடலும், மூளையும் விரைவில் சோர்ந்து விடும்.

வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தினால் கவனம் இருக்காது.இலகு உணவுகள் தேவைஇலகுவாக சாப்பிடக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து தரவேண்டியது அம்மாவின் பொறுப்பு. ஒரு முட்டை, வாழைப்பழம் தரலாம். அல்லது முட்டையுடன் பிள்ளைகளுக்கு பிடித்தமான பழங்களை கொடுக்கலாம். சத்துமாவு கஞ்சி கொடுக்கலாம். சப்பாத்தி, பூரி, தோசையின் மேல் வெண்ணெய், ஜாம் தடவி உருட்டி கொடுத்தால் சாப்பிடுவது எளிதாக இருக்கும்.ரொட்டியுடன் வெண்ணெய், ஜாம் கொடுத்தால் பிள்ளைகள் ஆர்வமாக சாப்பிடுவர். குட்டி இட்லிகளை நெய் தடவி பொடியில் தோய்த்து லேசாக வறுத்து கொடுக்கலாம்.

மனம் விரும்பும் மதிய உணவுமதிய உணவுக்கு சில பிள்ளைகள் கலவை சாதத்தை விரும்புவர். சில பிள்ளைகள் சாதம் தனியாக, குழம்பு அல்லது கிரேவி தனியாக கொண்டு செல்ல விரும்புவர். கலவை சாதமாக இருந்தால் எலுமிச்சை, தக்காளி சாதம் தரலாம். தக்காளியுடன் மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைத்து தாளித்து சாதத்துடன் கலந்தோ தனியாகவோ தரலாம். ’கிரீன்’ என்றால் கீரை மட்டுமல்ல, மல்லி, புதினாவும் சேர்ந்தது தான். மல்லி அல்லது புதினாவுடன் உளுந்து, பிற பொருட்கள் சேர்த்து சட்னி செய்து சாதத்தில் கிளறினால் வாசனையாக இருக்கும். இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி, மல்லிப்பொடி, மிளகாய்பொடி தாளித்து செய்யும் கலவையுடன் சாதத்தை கிளறினால் பிரவுன் நிறத்தில் அழகாக வரும்.

பருப்பும் முக்கியம்:கலவை சாதம் விரும்பும் குழந்தைகளுக்கு பருப்பு தர மறக்கக்கூடாது. கொஞ்சம் பருப்பை வேகவைத்து அதில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, கீரை, சுரைக்காய், சவ்சவ், முட்டைகோஸ் என ஏதாவது ஒரு காயை துருவி ஒருநிமிடம் கொதிக்க வைத்து நெய், மிளகுத்தூள், சீரகம், உப்பு சேர்த்து கொடுத்தால் அதன் வாசனையில் விரும்பி சாப்பிடுவர். ஒரு நிமிடம் வேகவைப்பதால் காய்கறிகளின் உயிர்ச்சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்கும்.

காலை வேளையில் தினமும் ஒரு ஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய் சேர்ப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்லது. ஒல்லியான குழந்தையாக இருந்தால் இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கலாம்.

மென்று சாப்பிட வேண்டும்: உணவை மென்று சாப்பிட குழந்தைகளை பழக்க வேண்டும். ஊட்டி விடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் பள்ளியிலும் ஆயாக்களின் தயவை எதிர்பார்த்து பிள்ளைகள் சாப்பிடாமல் காத்துக் கொண்டிருப்பர். அடுத்தடுத்த பிள்ளைகளுக்கு ஊட்டவேண்டும் என்ற அவசரத்தில் வேகவேகமாக பிள்ளைகளிடம் உணவை திணிக்கும் போது, அதே வேகத்தில் வாந்தி எடுத்து விடுவர். நான்கு வாய் சாப்பிட்டாலும் பிள்ளைகள் தானாக சாப்பிடுவதே நல்லது. அதன்பின் பசிக்கு சாப்பிட பழகுவர், என்றார்.

No comments:

Post a Comment