அங்கன்வாடி மையத்தில் மின் இணைப்பு துண்டிப்பு: வெயிலில் வாடும் பிஞ்சுகள்; அலட்சியத்தில் மாநகராட்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 27, 2015

அங்கன்வாடி மையத்தில் மின் இணைப்பு துண்டிப்பு: வெயிலில் வாடும் பிஞ்சுகள்; அலட்சியத்தில் மாநகராட்சி

ஆயிரம்விளக்கு: மாநகராட்சி அலட்சியம் காரணமாக, அங்கன்வாடி மையத்தின் மின்கட்டணம் செலுத்தப்படாததால், மின்வாரியம் மின் இணைப்பை துண்டித்து விட்டது. அதனால், குழந்தைகள் கொடும் வெயிலில் வாடி வருகின்றனர்.

பாக்கி எவ்வளவு? தேனாம்பேட்டை மண்டலம், 111வது வார்டு, சுதந்திரா நகரில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. அங்கு, அங்கன்வாடி மையம் மற்றும் பொது கழிப்பறை உள்ளன. இரண்டு கட்டடங்களும், 2011ம் ஆண்டு மாநகராட்சியால் கட்டப்பட்டவை. அவை, மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ளன. அங்கன்வாடி மையத்தில், 40 குழந்தைகள் பயிலுகின்றனர். கடந்த, 2011ம் ஆண்டு முதல், இன்று வரை, அங்கன்வாடி மையம் மற்றும் கழிப்பறைக்கு மின்கட்டணம் செலுத்தப்படவில்லை. அங்கன்வாடி மையத்திற்கு, 1,561 ரூபாயும், கழிப்பறைக்கு, 31,437 ரூபாயும் நிலுவையில் உள்ளது. அதையடுத்து, நேற்று காலை அங்கன்வாடி மையம் மற்றும் பொது கழிப்பறையின் மின் இணைப்புகளை, மின்வாரியத்தினர் துண்டித்து, மீட்டர் கருவியை எடுத்து சென்றனர்.

முடிவு என்ன? மின்சாரம் இல்லாததால், அங்கன்வாடி மையத்தில் இருந்த குழந்தைகள் கடும் வெயிலாலும், புழுக்கத்தாலும் வாடி மிகவும் சிரமப்பட்டனர். மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின் கட்டணம் செலுத்தாததால், மின் இணைப்புகளை துண்டிக்க, எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 32 ஆயிரம் ரூபாய் செலுத்தும் பட்சத்தில் மின் இணைப்பு வழங்கப்படும்' என்றார். மாநகராட்சி மின் துறை அதிகாரி கூறுகையில், 'சம்பந்தப்பட்ட வார்டு உதவி பொறியாளர்கள் தான், மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அதிகாரிகள் மாறுவதால், அதை கண்காணிக்க முடியாத நிலை உள்ளது' என்றார். சம்பந்தப்பட்ட 111வது வார்டில், உதவி பொறியாளர் இல்லை. தற்போது, 118வது வார்டு உதவி பொறியாளர் தான், கூடுதலாக அந்த வார்டை கவனித்து வருகிறார்.

No comments:

Post a Comment