மழலையர் பள்ளிகளுக்கான விதிமுறைகளை ஜூலை 22-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 17, 2015

மழலையர் பள்ளிகளுக்கான விதிமுறைகளை ஜூலை 22-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை இறுதி செய்து வருகிற ஜூலை 22-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மீது நடவடிக்கை

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் வக்கீல் பாலசுப்பிரமணியன். இவர், ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘தமிழகத்தில் 760 மழலையர் பள்ளிகள் முறையான அனுமதி எதுவும் பெறாமல் செயல்படுகிறது. ஆனால், அந்த பள்ளிகள் பெற்றோரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் வரை கல்வி கட்டணத்தை வசூலிக்கின்றன. முறையான அங்கீகாரம் பெறாமல் செயல்படும் இந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

கால அவகாசம்

அப்போது, ‘தமிழகம் முழுவதும் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும் என்றும், 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்குள் அங்கீகாரம் பெறாத, மழலையர் பள்ளிகளை இழுத்துமூடப்படும் என்றும், மழலையர் பள்ளிக்காக புதிய விதிமுறைகளை உருவாக்கப்படும்’ என்றும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு பின்னர் பலமுறை விசாரணைக்கு வந்தபோது, விதிமுறைகளை உருவாக்க அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘விதிமுறைகளை உருவாக்க மேலும் 6 வாரம் காலஅவகாசம்’ கேட்டார்.

ஆஜராக வேண்டும்

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், “மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை, அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் அரசு உருவாக்க வேண்டும். அந்த நிபந்தனைகளை அரசு இணைய தளத்தில் வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா நேரில் ஆஜராக வேண்டும். வழக்கை ஜூன் 16-ந் தேதிக்கு தள்ளிவைகிறோம்” என்று கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார் ஆஜராகி, ‘மழலையர் பள்ளிக்கான புதிய விதிமுறைகளை உருவாக்கி, அந்த வரைவு விதிமுறையை பள்ளி கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம்’ என்று கூறினார். அந்த வரைவு விதிமுறைகளை அறிக்கையாகவும் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

இறுதி விதிமுறை

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘தற்போது பள்ளி கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ள வரைவு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள விதிகள் குறித்து மழலையர் பள்ளிகளின் நிர்வாகங்கள், பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தமிழக அரசுக்கு வருகிற 22-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு வந்த கருத்துக்களை பரிசீலனை செய்து, வருகிற ஜூலை 22-ந் தேதிக்குள் மழலையர் பள்ளிக்கூடத்துக்கான இறுதி விதிமுறைகளை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட வேண்டும். இந்த வழக்கை ஜூலை 30-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment