மருத்துவ நுழைவு தேர்வு ரத்து: தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 16, 2015

மருத்துவ நுழைவு தேர்வு ரத்து: தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு

சென்னை, ஜூன் 16–அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும் 4 வாரத்திற்குள் மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி, பல் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.15 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த ஆண்டிற்கான மருத்துவ நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 3–ந்தேதி நடைபெற்றது.இந்த தேர்வை நாடு முழுவதும் 6 லட்சத்து 30 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். கடந்த 5–ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடபடுவதாக இருந்தது.இதற்கிடையே அரியானா மாநிலத்தில் நடந்த அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. தேர்வு தொடங்குவதற்கு முன்பே சில மாணவர்கள் கேள்வித்தாள்களை முறைகேடாக பெற்று தேர்வை எழுதியதாக கூறப்பட்டது.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் மேலும் சில மாநிலங்களில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. 102 கேள்விகளுக்கு பதில்கள் செல்போன் மூலம் மாணவ–மாணவிகளுக்கு அனுப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதற்கிடையே முறைகேடு நடைபெற்றதால் மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்வு முடிவை வெளியிடக் கூடாது என இடைக்கால தடை விதித்தனர். இதையடுத்து நேற்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ கல்லூரி நுழைவுத் தேர்வை ரத்து செய்து மீண்டும் 4 வாரத்திற்குள் மறுதேர்வை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த அதிரடி தீர்ப்பால் நாடு முழுவதும் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெறுவது வழக்கமாக உள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 25 ஆயிரம் மாணவ–மாணவிகள் இத்தேர்வை எழுதி இருந்தனர். இதில் சி.பி.எஸ்.இ பள்ளியில் படித்தவர்கள்தான் அதிகம் என்று கூறப்படுகிறது. தேர்வில் வெற்றி பெற கடுமையாக முயற்சி மேற்கொண்ட போதிலும் அதற்கு பலன் கிடைக்காமல் போய்விட்டதே என பல மாணவர்கள் வேதனையடைந்தனர்.சென்னை உள்ளிட்ட பல நகரங்களை சேர்ந்த மாணவர்கள் இதற்காக சிறப்பு பயற்சி வகுப்பிற்கு சென்று தேர்வு எழுதினார்கள். சென்னையில் உள்ள பிரத்யேக நுழைவுத் தேர்வு பயிற்சியில் பங்கேற்று தேர்வு எழுதிய மாணவர்கள் கோர்ட்டு உத்தரவு பார்த்து சோகத்தில் உறைந்துள்ளனர்.ரூ.12 ஆயிரம் கட்டணத்தில் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்று நம்பிக்கையுடன் இருந்த மாணவர்களுக்கு இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.இதுகுறித்து சென்னை முகப்பேரை சேர்ந்த மாணவர் முத்து பழனியப்பன் கூறும் போது, மருத்துவ நுழைவு தேர்வு ரத்து, மறுதேர்வு என்ற செய்தியை கேட்டு மனமுடைந்தேன். இந்த ஆண்டு நுழைவுத்தேர்வு வினாத்தாளைவிட கடந்த ஆண்டு வினாத்தாள் எளிதாக இருந்தது.இந்த தேர்வை மிகவும் நன்றாக எழுதி இருந்தேன். அதனால் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தேன். மீண்டும் ஒரு தேர்வை எழுதுவது கஷ்டமாக இருப்பதாக உணர்கிறேன் என்றார்.வில்லிவாக்கத்தை சேர்ந்த மாணவர் செல்லகுமார் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதுவரை உழைத்த காலம் நேரம் வீணாகி விட்டது. மறுதேர்விற்கான வினாத்தாள் எப்படி இருக்கும் என்ற கவலை எழுந்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது எழுதிய வினாத்தாள் கடினமாக இருந்தது என்றார்.திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி காயத்திரி கூறும் போது, நான் தீவிர முயற்சி செய்து இரவு, பகல் என பாராமல் நுழைவுத் தேர்வை எழுதினேன். நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட தகவல் அறிந்தவுடன் மிகுந்த மனவேதனையும், ஏமாற்றமும் அடைந்தேன். மறுதேர்வை நான் எழுதுவேனா என்ற கேள்வி என்னுள் எழுந்துள்ளது. மீண்டும் இதற்காக படித்து தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பது கஷ்டமாக இருக்கிறது என்றார்.தமிழகத்தை பொறுத்த வரையில் 20 அரசு மருத்துவ கல்லூரியில் மொத்தம் 2655 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் 398 இடங்கள் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் நிரப்படுகிறார்கள். இந்த இடங்களுக்கு எந்த மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் இங்கு வந்து படிக்க முடியும். சி.பி.எஸ்.இ. மாணவர்தான் அதிகளவில் இந்த இடங்களை ஆக்கிரமிக்கிறார்கள்.அகில இந்திய நுழைவுத் தேர்வு மீண்டும் நடைபெறுவதால் தமிழகத்தில் நடக்கும் மருத்துவ கலந்தாய்வில் எவ்வித மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி 19–ந்தேதி தொடங்கி 23–ந்தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறும்.15

No comments:

Post a Comment