உணவுமுறை விழிப்புணர்வு இல்லாததால் மன அழுத்த பிரச்னைகளில் மாணவர்கள்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, June 19, 2015

உணவுமுறை விழிப்புணர்வு இல்லாததால் மன அழுத்த பிரச்னைகளில் மாணவர்கள்!

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக, பள்ளி கல்வித்துறை சார்பில், நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்துக்கு, 15 நாட்கள் வீதம், 10 பள்ளிகள் வரை நேரில் சென்று, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு உடல் சார்ந்த, மனம் சார்ந்த ஆலோசனை வழங்கப்படுகிறது.
அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், உளவியல் ஆலோசகர் அருள்வடிவு, மாணவர்களுக்கு நேற்று ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து சேவூர், தெக்கலூர், அவிநாசி பகுதியில் உள்ள பிற பள்ளிகளிலும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
அருள்வடிவு கூறியதாவது: மாணவர்கள் பலர், மனஅழுத்தத்துடன் உள்ளனர். சிலர் தலைவலி, வயிற்றுவலி போன்ற பிரச்னைகளை கூறுகின்றனர். கிராமப்புறங்களை விட, நகர்ப்புற மாணவர்களிடம், இப்பிரச்னை அதிகமாக உள்ளது.
உணவு, தூக்கம் குறித்த விழிப்புணர்வு, மாணவர்களிடமோ, பெற்றோர்களிடமோ சிறிதும் இல்லை. பெரும்பாலான மாணவ, மாணவியர், பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றவுடன், அதிக உணவு சாப்பிடுகின்றனர்; காலை நேரங்களில், பலரும் சாப்பிடுவதே இல்லை. அதேபோல், தூக்கம் குறித்த திட்டமிடலும் இல்லாததால், உடல் மற்றும் மனதின் சமநிலை கெடுகிறது. மனஅழுத்தம் போன்ற பாதிப்பு, அவர்களுக்கு ஏற்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
தண்ணீர் குடிப்பதில்லை
தேவையான அளவுக்கு குடிநீர் குடிக்கும் வழக்கம், பல மாணவ, மாணவியரிடம் இல்லை. சில பள்ளிகளில் கழிவறை மோசமாக இருப்பதால், அங்கு செல்வதை தவிர்ப்பதற்காகவே,
நாள் முழுவதும் வகுப்பறையில் குடிநீர் அருந்துவதை தவிர்க்கின்றனர்.
பல பள்ளிகளில், சுகாதாரமான குடிநீர், மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. தேவையான தண்ணீர் உடலுக்கு கிடைக்காதபோது, உடல் மட்டுமின்றி மனமும் சோர்வடைகிறது. குடிநீருக்கு பதிலாக, ரசாயனம் கலந்த குளிர்பானம் அருந்தும்போது, உடல்நிலை மேலும் பாதிக்கிறது. இவ்விஷயங்களில், பள்ளி கல்வித்துறை கூடுதல் கவனம் செலுத்தி, மாணவ, மாணவியர் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பெற்றோர் கவனத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment