மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் அபாயம் :ராஜபாளையம் நகரில் இல்லை போதுமான அரசு பள்ளிகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 20, 2015

மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் அபாயம் :ராஜபாளையம் நகரில் இல்லை போதுமான அரசு பள்ளிகள்

ராஜபாளையம்:ராஜபாளையம் நகரில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்தாததால் பள்ளியில் இடம் கிடைக்காத மாணவ, மாணவிகள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் அபாயம் உள்ளது.இதை தடுக்க நகர் பகுதியில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜபாளையம் வட்டாரத்தில் அரசு, உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், ஆதிதிராவிடர் நல பள்ளிகள் , துவக்கப் பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி என 188 பள்ளிகள் உள்ளன. கிராமங்களில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு பிரச்னை இல்லை.

போதிய இடவசதி, வகுப்பறைகள் உள்ளன. ஆனால் நகர் பகுதி மாணவ, மாணவிகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு, பிளஸ் 1 சேர்க்கைக்கு இடம் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். பெற்றோர் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை மெட்ரிக் பள்ளியில் படிக்க வைக்கின்றனர். ஆறாம் வகுப்பு வரும்போது கல்வி கட்டணம், பஸ் கட்டணம் போன்றவை உயர்வதால் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க விரும்புகின்றனர். இதனால் இங்கு போட்டி ஏற்படுகிறது.

ராஜபாளையம் நகரில் ரயில்வே பீடர்ரோட்டில் சேத்தூர் ஜமீன் சேவுகபாண்டியனால் 1933 ல் துவக்கப்பட்ட பள்ளி நகரின் மையப்பகுதியில் உள்ளது.

இந்த பள்ளி தற்போது ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளியாக வளர்ச்சி அடைந்து உள்ளது. நகரில் இருக்கும் ஒரே அரசு பள்ளியான இங்கு ஆறாம் வகுப்பு,பிளஸ் 1 சேர்க்கையின்போது தலைமைஆசிரியர்கள் செய்வதறியாமல் திகைக்கின்றனர். அரசு பள்ளி என்பதால் புதிதாக வகுப்பை துவக்கி அதில் சேர்க்கையை துவக்க அரசு முன் அனுமதி பெறவேண்டும். அனுமதி பெற்று வகுப்பை துவக்கினாலும், வகுப்பறை கட்டடம், அதற்கான ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர்.

இது தவிர கிராமங்களில் உள்ள மாணவர்கள், தங்களது வீட்டருகே உள்ள பள்ளியை தவிர்த்து நகர் பள்ளியை விரும்புகின்றனர். டியூசன், கம்ப்யூட்டர், டைப் ரைட்டிங் படிக்க நகரில் வசதி உள்ளதாக கருதுகின்றனர். ஏற்கனவே போட்டி உள்ள நகர் அரசு பள்ளிகளுக்கு இவர்களும் வருவதால் போட்டி அதிகமாகிறது.

இந்த போட்டிகளில் சீட் கிடைத்த மாணவ, மாணவிகள் தங்களது படிப்பை தொடர்கின்றனர். மற்றவர்கள் மில், கார்மெண்ட்ஸ் போன்ற கூலி தொழிலுக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க நகராட்சி பகுதியில் உள்ள அரசு இடத்தை தேர்வு செய்து அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை உடனே துவக்கவேண்டும். இதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்தால் இரு ஆண்டுபின் வரும் மாணவ, மாணவிகளுக்கு வசதியாக இருக்கும். கல்வித்துறை, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ராஜபாளையம் காளிராஜன், ""ராஜபாளையம் மாணவ, மாணவிகள் மாநில அளவு, மாவட்ட அளவில் ரேங்க் பெறுகின்றனர். கல்வியின் வளர்ச்சி அந்தளவிற்கு உள்ளது. ஆனால் ஆறாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் அலைவது பரிதாபமாக உள்ளது. நகரில் ஒரே அரசு பள்ளி தான் உள்ளது.

முன்பு தனியார் டிரஸ்ட் அமைத்து பள்ளிகளை உருவாக்கினர். 1980 க்கு பின் இந்த வகை பள்ளி துவங்கவில்லை. குறைந்த மதிப்பெண் பெற்ற ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் அரசு பள்ளியை நம்பி உள்ளனர். அரசு பள்ளியின் எண்ணிக்கை இதுவரை உயரவில்லை.

அரசு பள்ளியில் இடம் கிடைக்காதவர்கள் ஏதாவது ஒரு தொழிலுக்கு செல்லும் நிலை உள்ளது. இதை தடுக்க நகரில் அரசு பள்ளியை துவக்கவேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment