17 பொறியியல் கல்லூரிகளின் இடங்கள் பாதியாகக் குறைப்பு:முதுநிலைப் படிப்பு இடங்கள் முற்றிலும் ரத்து - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, June 17, 2016

17 பொறியியல் கல்லூரிகளின் இடங்கள் பாதியாகக் குறைப்பு:முதுநிலைப் படிப்பு இடங்கள் முற்றிலும் ரத்து

போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 17 பொறியியல் கல்லூரிகளின் இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை இடங்களை பாதியாகக் குறைத்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதோடு, அந்த 17 கல்லூரிகளின் முதுநிலை பொறியியல் படிப்பு இடங்களை முழுவதுமாக ரத்து செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) கட்டுப்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ-யிடம் அங்கீகாரம் பெற விண்ணப்பித்து அனுமதி நீட்டிப்புப் பெற்ற பிறகே மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.

இதற்கு சம்பந்தப்பட்ட இணைப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய பல்கலைக்கழகம் மூலமாக பொறியியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ-க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கென பொறியியல் கல்லூரிகள் வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை ஒவ்வொரு பொறியியல் கல்லூரிகளும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிப்பதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள், தகுதிவாய்ந்த பேராசிரியர்களின் எண்ணிக்கையையும் கல்லூரிகள் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு, ஏஐசிடிஇ-யிடம் அனுமதி பெற்று மாணவர் சேர்க்கையை நடத்தும் கல்லூரிகளில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம், உதாரணமாக தமிழகத்தைப் பொருத்தவரை அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டு முழுமையான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும். அவ்வாறு உள்கட்டமைப்பு வசதிகள், போதிய பேராசிரியர்கள் இல்லையெனில் அந்தக் கல்லூரிகள் மீது பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொள்ளும்.
பொறியியல் கல்லூரிகள் மீது தொடரும் புகார்கள்: இவ்வாறு பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றபோதும், பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லையெனக் கூறி மாணவர்கள் போராடுவது தொடர்கதையாகி வருகிறது.
சென்னைக் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களுடைய கல்லூரியில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லையென பெற்றோருடன் புதன்கிழமை (ஜூன் 15) போராட்டம் நடத்தினர். தங்களுக்கு மாற்று கல்லூரியில் படிக்க அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யவேண்டும் எனவும், இதுதொடர்பாக தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப் போவதாகவும் அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றபோதிலும், பல பொறியியல் கல்லூரிகள் முழுமையான உள்கட்டமைப்பு வசதிகளும், போதிய தகுதி
வாய்ந்த பேராசிரியர்கள் இல்லாமலும் இயங்குகின்றன. எனவே, தரமான பொறியாளர்கள் உருவாகும் வகையில் முழுமையான ஆய்வு மேற்கொண்டு, உறுதியான நடவடிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் எடுக்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
17 கல்லூரிகளில் இடங்கள் 50 சதவீதம் குறைப்பு:
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் கூறியது:
பொறியியல் கல்லூரிகளில் ஏஐசிடிஇ வழிகாட்டுதல்படி போதிய உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக பல்கலைக்கழகம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுகள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதுபோல நிகழாண்டு நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் சென்னை அடுத்த செங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் 17 பொறியியல் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள், தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் போதிய அளவில் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கல்லூரிகளில் 2016-17 கல்வியாண்டுக்கு அனைத்து இளநிலை பொறியியல் படிப்புகளிலும் இடங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளன.
அதாவது கடந்த 2015-16 கல்வியாண்டில் இந்த 17 கல்லூரிகளும் நடத்திய சேர்க்கை எண்ணிக்கையில், பாதி இடங்களில்தான் மாணவர்களை இம்முறை சேர்க்க முடியும்.
அதுமட்டுமின்றி இந்தக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த அனைத்து முதுநிலை பொறியியல் படிப்புகளின் அனைத்து(100 சதவீதம்) இடங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த கல்லூரிகள் 2016-17 கல்வியாண்டில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க முடியாது.
இதுதவிர, ஏஐசிடிஇ அறிவுறுத்தலின்படி தமிழகத்திலுள்ள 3 பொறியியல் கல்லூரிகளுக்கு 2016-17 கல்வியாண்டுக்கு பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று கல்லூரிகளில் 100 சதவீத மாணவர் சேர்க்கை இருக்காது என்றார் அவர்.
உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து
ஏஐசிடிஇ கூறுவது என்ன?
ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி பொறியியல் கல்லூரிகளில் 15 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் இருக்க வேண்டும்.
கணினி ஆய்வகத்தைப் பொருத்தவரை 6 மாணவர்களுக்கு ஒரு கணினி என்ற விகிதத்தில் இருக்க வேண்டும
   
அதாவது, கணினி அறிவியல், இசிஇ, இயந்திரவியல் என ஒவ்வொரு துறைக்கும் குறைந்தபட்சம் 20 கணினிகளைக் கொண்ட ஒரு கணினி ஆய்வகம் இருந்தாகவேண்டும். அதோடு 100 கணினிகளை உள்ளடக்கிய ஒரு பொதுவான கணினி ஆய்வகம் ஒன்றும் இருக்க வேண்டும்.
மேலும் கல்லூரியில் மொத்த மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்றபடி இண்டர்நெட் வேகத்தின் அளவை வினாடிக்கு 16 மெகா பைட்ஸ் அளவில் இருந்து அதிபட்சம் 100 மெகா பைட்ஸ் என்ற அளவில் இருக்க வேண்டும்.
மேலும் பாதுகாப்பான வை-ஃபை வசதியை இடம்பெறச் செய்ய வேண்டும்.
இதுபோல பொறியியல் கல்லூரிகளில் இருக்க வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த வழிகாட்டுதலை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. ஏஐசிடிஇ இணையதளத்தில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக பெற்றிருக்கும் பொறியியல் கல்லூரிகளுக்குத்தான் இணைப்பு அந்தஸ்தையும், மாணவர் சேர்க்கைக்கான அனுமதியையும் அண்ணா பல்கலைக்கழகம் வழங்க முடியும்.
எங்கு புகார் தெரிவிப்பது?
பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சென்னை கிண்டியில் அமைந்துள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்திலும், அண்ணா பல்கலைக்கழகத்திலும் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ மாணவர்களும், பெற்றோரும் புகார் தெரிவிக்கலாம்.
தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்தை 044 - 22351018 (இணைப்பு 223) என்ற தொலைபேசியில் புகார் அளிக்கலாம். அல்லது ஸ்ரீர்ம்ல்ப்ஹண்ய்ற்ள்க்ர்ற்ங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் தெரிவிக்கலாம். இந்தப் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, புகார் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் கூறுகையில், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்த பிறகும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஏற்கெனவே எச்சரிக்கப்பட்ட கல்லூரிகளில் இரண்டாவது முறை ஆய்வின்போதும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டால், பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
கல்லூரிகள் விவரம் வெளியிடப்படுமா?
உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இல்லாத 17 பொறியியல் கல்லூரிகள் மீது அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டு, அந்தக் கல்லூரிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துள்ளது.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் 2016-17 கல்வியாண்டில் மறைமுகமாக கூடுதல் இடங்களில் மாணவர் சேர்க்கையை நடத்திவிடாமல் இருக்கவும், புதிதாக பி.இ. சேரவுள்ள மாணவர்களிடையே அந்தக் கல்லூரிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், நடவடிக்கைக்கு உள்ளான 17 பொறியியல் கல்லூரிகளின் விவரங்களை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.

No comments:

Post a Comment