சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த இரு உண்டு உறைவிடப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னை மாநகராட்சியில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் 87 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம் 92 சதவீதத்திலிருந்து 95 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் 85 சதவீதத்திலிருந்து 86 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மேலும் உயர்த்த, வீட்டில் போதுமான கற்றல் சூழ்நிலை இல்லாத மாணவர்களின் நலன் கருதி, இரு அதிநவீன உண்டு உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு, அதில் தங்கவைக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அறிவியல் கல்வி மையத்துடன் இணைந்து, ரூ.2 கோடி செலவில் மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த அறிவியல் ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது. டீச் ஃபார் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ரூ.1 கோடி செலவில் மாணவர்களுக்கு ஆங்கில வழிக்கல்வியும் வழங்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment