பிளாஸ்டிக் குப்பையை குறைக்க மத்திய அரசு முயற்சி! அரசு விழாக்கள், கூட்டங்களில் பாட்டில் குடிநீருக்கு தடை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 9, 2016

பிளாஸ்டிக் குப்பையை குறைக்க மத்திய அரசு முயற்சி! அரசு விழாக்கள், கூட்டங்களில் பாட்டில் குடிநீருக்கு தடை

'மத்திய, மாநில அரசுகள் நடத்தும் விழாக்கள், கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்தக் கூடாது' என மத்திய குடிநீர் மற்றும் துாய்மை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. பிளாஸ்டிக் குப்பையை குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதையும் துாய்மைப்படுத்தும் 'ஸ்வச் பாரத்' என்ற 'துாய்மை இந்தியா' திட்டம் மகாத்மா காந்தி பிறந்த தினத்தில் அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியே சாலைகளை சுத்தப்படுத்தி திட்டத்தை துவக்கி வைத்தார்.கடந்த 2014 அக்., 2ல் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் இலக்கு 2019 அக்., 2ம் தேதிக்குள் நாடு முழுவதையும் துாய்மையாக்க வேண்டும் என்பதாகும். இதற்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரு சிறிய கிராமத்தின் துாய்மையைக் கூட
முதன்மைபடுத்தி அதற்கு மதிப்பெண் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 'ஸ்வச் ஆப்' என்ற கணினி செயலியும் வெளியிடப்பட்டு உள்ளது.இந்நிலையில் மத்திய குடிநீர் மற்றும் துாய்மை துறை கூடுதல் செயலர் சரஸ்வதி பிரசாத் அனைத்து மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில்கூறியுள்ளதாவது:

'துாய்மை இந்தியா' திட்டம் நடைமுறையில் இருப்பதை அனைவரும் அறிவீர்கள். காந்திக்கு செலுத்தும் அஞ்சலியாக இத்திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய குடிநீர் மற்றும் துாய்மை அமைச்சகத்தின் கீழ் வரும் துறை அலுவலகங்கள் நடத்தும் விழாக்களில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு உள்ளது.
அரசு துறை விழாக்களில் பாட்டில் குடிநீர் பயன்படுத்துவதை சில மாநில அரசுகள் நிறுத்தி விட்டன. அதேபோல மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் கூட்டங்கள், விழாக்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் பயிற்சி கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்.
கூட்டங்களில் பங்கேற்போருக்கு
குடிநீர் வழங்க மாற்று வழிகளை பின்பற்ற வேண்டும். இதன்மூலம் பிளாஸ்டிக் குப்பைகள் உருவாவதை பெரிதும் தடுக்க முடியும்; துாய்மை இந்தியாவை உருவாக்க முடியும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

100 'பிராண்ட்'

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட 100 'பிராண்ட்' பாட்டில் குடிநீர் விற்பனையில் உள்ளன. இவற்றைத் தயாரிக்க 1,200 இடங்களில் குடிநீர் ஆலைகள் இருக்கின்றன. தமிழகத்தில் 600 இடங்களில் இந்த ஆலைகள் உள்ளன. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மட்டும் 300 இடங்களில் குடிநீர் ஆலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவை அனைத்தும் தனியார் குடிநீர் ஆலைகள். இதுதவிர தமிழக அரசின் 'அம்மா' குடிநீர் ஆலை இருக்கிறது. 'அம்மா' குடிநீர் ஆலை நாள் ஒன்றுக்கு, 2.25 லட்சம் லிட்டர் குடிநீரை பாட்டிலில் அடைத்து விற்பனைக்கு அனுப்புகிறது.
தனியார் ஆலைகள் 25 லட்சம் லிட்டருக்கும் அதிகமான குடிநீரை பாட்டிலில் அடைத்து சந்தைக்கு கொண்டு வருவதாக அதிகாரப்பூர்வமற்ற புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதுதவிர பாக்கெட்களில் அடைக்கப்பட்ட குடிநீரும் விற்பனையாகிறது.

No comments:

Post a Comment