2300 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 5, 2017

2300 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்.

தமிழகம் முழுவதும் துறை முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்ற 2300 தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடக்க கல்வியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் இளங்கலை பட்டத்துடன் பி.எட்., முடித்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். பணியேற்றதற்கு பின் இவர்கள் முதுகலை, எம்.பில்., அல்லது பி.எச்டி., போன்ற உயர் பட்டப் படிப்புகள் பயில தொடக்க கல்வித்துறையில் முன் அனுமதி பெற வேண்டும்.இதற்காக 2009ம் ஆண்டிற்கு முன் சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்க அலுவலர் அல்லது உதவி தொடக்க கல்வி அலுவலர் அளவிலேயே அனுமதி அளிக்கப்பட்டது. அனுமதி பெறமுடியாதபட்சத்தில் படிப்பு முடித்தவுடன் அவர்களுக்கு 'பின்னேற்பு' அனுமதி அளிக்கப் பட்டது. உயர் படிப்புகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டதால் இதில் பல முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதனால் 2009க்கு பின் உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு 'பின்னேற்பு' அனுமதி பெற வேண்டும் என்றால், துறை செயலர் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.

ஆனாலும் 2009ம் ஆண்டிற்கு பின் மாநில அளவில் 2300 ஆசிரியர்களுக்கு மேல் உயர்கல்வி முடித்து 'பின்னேற்பு' அனுமதிக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு பணப் பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய உத்தரவில், 'முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களிடம் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான உரிய விளக்கம் பெற்று, ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும்,' என உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "மாநில அளவில் உயர்கல்வி பயின்று 2300 பேர் 'பின்னேற்பு' அனுமதிக்குகாத்திருக்கின்றனர். அனுமதி அளிக்க பல்வேறு சங்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தின. இந்நிலையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.ஆசிரியர்களின் விளக்கம் ஏற்கப்பட்டால் அவர்களுக்கு பணப்பலன் உட்பட சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்," என்றனர்.

No comments:

Post a Comment