மாற்றம் ஒன்றே மாறாதது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 1, 2017

மாற்றம் ஒன்றே மாறாதது

புதிய ஆண்டில் புதிய ஊருக்கு சென்று வாழ்ந்தால் மகிழ்ச்சியோடு வாழலாம் என்று நினைத்த ஒருவர் நதிக்கரையில் இருந்த நகருக்குச் செந்றார். நகரின் எல்லையில் இருந்த டீக்கடைக்காரரிடம்
"நான் இந்த நகரில் வந்து வசிக்க ஆசைப்படுகிறேன். இங்குள்ள மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். 
"ஏற்கனவே நீங்கள் வசித்து வந்த நகரத்திலுள்ள மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என திருப்பிக் கேட்டார் டீக்கடைக்காரர்.

"அவர்கள் மிகவும் மோசமானவர்கள். எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். பொறாமை பிடித்தவர்கள். கொடுமையானவர்கள். எனக்கு அந்த ஊரில் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. அதனால் தான் நான் இந்த நகரில் வந்து வசிக்க விரும்புகிறேன்." என்றார்.
"இந்த ஊரில் உள்ள மக்களும் அதே மாதிரி தான் இருக்கிறார்கள். இங்கு நீங்கள் மகிழ்ச்சியாக வாழ முடியாது. இந்த ஊருக்கு வரும் முயற்சியை கைவிடுவது நல்லது" என்றார் டீக்கடைக்காரர்.
சில நாட்கள் கழித்து  டீக்கடைகாரரிடம் மற்றொருவர் வந்து அந்த ஊரைப் பற்றி கேட்டார். டீக்கடைக்காரரும் "ஏற்கனவே நீங்கள் வசித்து வந்த நகரத்திலுள்ள மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்ற அதே கேள்வியை கேட்டார்.
"நான் வசித்து வந்த ஊரில் உள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள். உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள். அனைவரிடமும் அன்பாக பழகுபவர்கள். அங்கு நான் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தேன். அந்த ஊரில் இருந்து வருவதற்கு விரும்பவில்லை. ஆனாலும் எனக்கு ஒரு மாற்றம் தேவை அதற்காகத் தான் இந்த ஊருக்கு வர விரும்புகிறேன்" என்று பதிலளித்தார்.
"இந்த ஊரில் உள்ள மக்களும் அதே மாதிரி தான் இருக்கிறார்கள். இங்கும் நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம். இந்த ஊருக்கு நீங்கள் தைரியமாக வரலாம்." என்றார் டீக்கடைக்காரர்.
சிலநேரங்களில் நாம் பெரிய மாற்றங்களை வெளிப்புறங்களிலிருந்து எதிர்பார்ப்போம். ஆனால் மாற்றங்கள் நமக்குள் இருந்து உருவாக வேண்டும். புதிய மனிதர்கள். புதிய சூழல்கள், புதிய வாழ்க்கை முறைகள் என வெளிப்புற வாழ்க்கை முறை எப்படி மாறினாலும் நமக்குள் ஒரு மனமாற்றம் ஏற்படவில்லையெனில் உண்மையில் ஒரு மாற்றமும் ஏற்படாது. வருடந்தோறும் புது வருடத்தில் ஏராளமான உறுதிமொழிகளை எடுக்கிறோம். அவைகள் பின்பற்றப்படாமலிருக்கப்படுவதற்கான காரணம் நம் மனதில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இருப்பது தான்.
மனதில் ஏற்படும் மாற்றம் நம் மூளையை புதுப்பித்து புத்துயிர் அளிக்கிறது. இதனால் நம் காதுகள் புதிப்பிக்கப்படுகிறது. நல்ல சிந்தனைகளை மட்டுமே காதுகளால் தெளிவாக கேட்கப்படும் நிலை ஏற்படுகிறது. வெளியிலிருந்து தேவையில்லாத வார்த்தைகள் கலந்து வந்தாலும் காதுகளுக்கு அவைகளை வடிகட்டும் திறன் கிடைக்கிறது. நல்ல சிந்தனைகள் மட்டும் மூளைக்குள் சென்றால் அது நம் சிந்தனையில் பிரதிபலிக்கும். அப்போது தொண்டையில் இருந்து உருவாகும் வார்த்தைகளும் அழகானவைகளாக இருக்கும்.
மாற்றம் என்பது நம் சிந்தனையிலிருந்து உருவாவது.
புதிய ஆண்டில் மாற்றங்கள் உருவாகட்டும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment