இவரே தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து தையல் கூலியை மின்னணு முறையில் வாங்க ஆரம்பித்தாரானால் மொத்தப் பணமும் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம் இவரது வங்கிக்கு இவரது வருடாந்தர வரவு எவ்வளவு, அதில் செலவு எவ்வளவு, இவரது மொத்த வருமானம் அல்லது லாபம் எவ்வளவு என்பது தெள்ளத்தெளிவாகிறது. இதுவே அவரது கடன் நம்பகத்தன்மைக்குச் சான்றாகிறது. இவர் தனது கடையை விரிவுபடுத்த நினைத்தால் வங்கிகளுக்கும் கடன் கொடுப்பது எளிதாகிறது.
பணம் என்பதை முழுவதுமாகத் தவிர்க்கவே முடியாது என்பதுதான் உண்மை. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே பணம் என்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால் முழுமையாகப் பணமில்லாப் பொருளாதாரம் என்பதை விட பணப்புழக்கம் குறைந்த பொருளாதாரத்தை நோக்கியே நமது பயணம் இருக்க வேண்டும்.
சாதித்த கென்யா
தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரக் கட்டமைப்பு நாட்டின் எல்லாப் பகுதிகளையும் அடையாத நிலையில் மின்னணுப்பரிமாற்றம் என்பது எப்படி சாத்தியமாகும்? ஆனால் தற்போதுள்ள தொழில்நுட்ப முன்னேற்றத்தில் மின்சாரமும் அகண்ட அலைவரிசையும் தேவையே இல்லாமல் சாதாரண மொபைல் மூலமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும். சாதாரண மொபைலில் குறுஞ்செய்திகள் மூலமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்பதை சாதித்துக்காட்டியிருக்கிறது கென்யா.
நம் நாட்டிலும் கிராமங்களில் பணம் மூலம் வர்த்தகம் என்பது சில நூறுகள் அல்லது ஆயிரங்களில் மட்டுமே இருக்கிறது. இதற்கு 50, 100 போன்ற குறைந்த மதிப்புள்ள நோட்டுகளே போதுமானது. விவசாயிகளின் விளை பொருட்களை விற்கும்போது மட்டுமே சில பத்தாயிரங்களில் தொடங்கி லட்சங்களில் பணம் கை மாறுகிறது. இன்றைக்கு எல்லா கிராமங்களிலும் வங்கிக் கிளைகள் ஒன்றாவது இருக்கின்றன.
அவ்வாறு இல்லாவிட்டாலும் நாட்டில் எல்லோரும் வங்கிக்கட்டமைப்பில் இணையும்போது தானாகவே வங்கிக்கிளைகள் விரிவடையும். விவசாயிகள் பலருக்கு இன்று வங்கிக்கணக்கும் வங்கிகளில் கடன் வசதியும் கிடைத்துள்ளது. ஏற்கெனவே சொன்னது போல வருமானம் முழுவதும் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டால் இது கடன் பரிவர்தனைகளை மேலும் எளிதாக்குகிறது.
வருமானம் குறையுமா?
நாட்டில் பெரும்பான்மையானோர் ஆதார் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். மார்ச் 2017க்குள் எல்லா வங்கிக்கணக்குகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டு விடும். இதுவரை ஜன்தன் யோஜனா மூலம் வங்கிக்கணக்கு தொடங் காதவர்கள்கூட உடனே கணக்குத் துவங்கி ஆதா ருடன் இணைத்துக் கொள்ளலாம். ஆதாருடன் இணைந்த மின்னணுப்பரிமாற்றம் சீக்கிரத்தி லேயே பெரிய அளவில் விரிவடையும். அப்போது கிரெடிட், டெபிட் அட்டைகள் இல்லாமலேயே மின்னணுப்பரிமாற்றம் என்பது சாத்தியமாகும்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இதுவரை விசா/மாஸ்டர் போன்ற அமெரிக்கக் கம்பெனிகளுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 2 முதல் 2.5 சதம் வரை கமிஷனாகக் கொடுத்த பணம் இனி வெளியே போகாது. இதனால் அன்னியச் செலாவணியும் மிச்சமாகிறது. ஆதார் மூலமான பணப்பரிமாற்றத்துக்கு ஆதார் எண்ணுடன் கைரேகை மூலம் உறுதிப்படுத்துவது அவசியம் என்பதால் கிரெடிட், டெபிட் கார்டுகள் போல ‘குளோனிங்’,ஸ்கிம்மிங் போன்ற அச்சுறுத்தல்கள் இல்லை.
மின்னணுப்பரிமாற்றம் பற்றி பல அச்சங்கள் பரப்பப்படுகின்றன. இந்திய வங்கிகளின் தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு போதுமானதாக இல்லை. ஹேக்கர்கள் இவற்றை எப்பொழுது வேண்டுமானாலும் ஊடுருவலாம் என்பது ஒரு பொதுவான கருத்தாக வைக்கப்படுகிறது. ஆனால் இது ஏதோ நவம்பர் 8க்குப் பிறகுதான் உருவானது போலப் பேசப்படுவதுதான் வியப்பாக உள்ளது. தேவைகள் உருவாகும்போது அதற்கேற்பக் கட்டுமானங்களும் பாதுகாப்பு அம்சங்களும் அதிகரிக்கப்படும் என்பதுதான் தொழில்நுட்பத்துறையில் நாம் காணும் அம்சம்.
ஒய்2கே என்று சொல்லப்பட்ட 2000 வருடம் வந்த போது எழுந்த பிரச்சினையை உலக அளவில் சமாளித்ததில் இந்தியர்களுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதும் இந்தப் பிரச்சினையை சரி செய்து விட்டு இந்தத் திருத்தங்கள் சரியாக செய்யப்பட்டனவா என்று முதன்முதலில் நேரடியாகக் கண்டறிந்தது அப்போது 90 நாட்கள் முன்னரே முன்பதிவு செய்த இந்திய ரயில்வே என்பதும் நாம் மறந்து விட்டோம்.
பணமில்லாப் பொருளாதாரம் என்பது முற்றி லும் பணத்தை ஒழிப்பதல்ல. குறைந்த மதிப்பு நோட்டுக்களை குறைந்த அளவில் பயன்படுத் துவதும் ஆயிரங்களிலான பரிவர்த்தனைகளை மின்னணுப்பரிமாற்றமாக்குவதும் மொத்தத்தில் எல்லா வர்த்தகப் பரிவர்த்தனைகளையும் மின்னணுமயமாக்குவதுமேயாகும். இதன் மூலம் வரி வருவாய் உயரும்போது அது வரிவிதிப்பு விகிதங்களைக் குறைக்கும்.
வரிவிகிதங்கள் குறைந்தால் வரி ஏய்ப்பும் குறையும். ஆனால் இவை எல்லாம் ஒரே இரவில் நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தில்தான் முடியும். கறுப்புப்பணத்திற்கு எதிரான போரில் மின்னணுப்பணப் பரிமாற்றம் என்பது ஒரு காரணிதானே தவிர இதுவே எல்லாமுமாகிவிடாது.
No comments:
Post a Comment