தேசிய கண்தான இருவார விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25 முதல் செப். 8-ம் தேதிவரை அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் உச்ச பட்ச அளவுக்கு விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க
வேண்டும் என கண் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கண்தானத்தின் அவசியம் குறித்து டுவின்டெக் கல்வி அறக்கட்டளை நிறுவனத் தலைவரும், கண் மருத்துவ உதவியாளருமான அ.மகாலிங்கம் கூறியதாவது:
''இந்தியாவில் கருவிழி பாதிப்பால் பார்வையிழந்து தானம் வழங்கப்படும் கண்களை எதிர்பார்த்து 10 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். கண் தானத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாமையே இந்த நிலைக்கு காரணம். இதைத் தவிர்க்க ஆக.25 தொடங்கும் தேசிய கண்தான விழிப்புணர்வு இரு வார விழாவை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
கண் வங்கியின் செயல்பாடுகள்
- கண் வங்கி என்பது ஒரு சமுதாய அமைப்பாகச் செயல்படுகிறது. இது கண் தானம் மூலம் பெறப்படும் கருவிழிகளைச் சேகரித்து, முறையாகப் பரிசோதித்து அதைக் கருவிழி மாற்று சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு அனுப்பும் பணியைக் கண் வங்கிகள் செய்து வருகின்றன.
- * அரசு. கண் மருத்துவமனை , எழும்பூர்,தொலைபேசி எண் : 044 - 28555281
- * சி.யு ஷா கண் வங்கி சங்கர நேத்ராலயா,தொலைபேசி எண் 044 – 28281919
- * ராஜன் கண் மருத்துவமனை - கண் வங்கி தொலைபேசி எண் : 044 28340300
- * அகர்வால் கண் மருத்துவமனை - கண் வங்கி தொலைபேசி எண் 044 -28116233
கண் தானம் செய்ய, நாம் செய்ய வேண்டியவை:
1. நமக்குத் தெரிந்து யாரேனும் ஒருவர் மரணமடைந்துவிட்டால்,அந்த வேளையில் நெருங்கிய உறவினர்கள் வேதனை மற்றும் அதிர்ச்சியில் இருப்பார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறி, மரணமடைந்தவர் உடல் உறுப்புகள் அல்லது கண்களை தானம் செய்ய உறுதிமொழி ஏதேனும் எடுத்திருந்தால் உடனடியாக கண் வங்கியை தொடர்பு கொள்ளலாம். கண்தான உறுதிமொழி எடுத்திருக்கவில்லை என்றால் நெருங்கிய உறவினரிடத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்லி "அவரது கண்களை தானம் அளிப்பதால், இரண்டு பேருக்கு பார்வை கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறதே.. அவரது ஆத்மா சாந்தியடையுமே" என்று ஊக்குவித்து அவர்களது சம்மதம் பெற்று கண் வங்கியை தொடர்பு கொள்ளலாம்.
2. கண் வங்கியை தொடர்பு கொண்டு மரணமடைந்தவரின் பெயர், வயது, ஆண்/பெண், மரணத்தின் காரணம், மரணமடைந்த நேரம், தற்போது உடல் இருக்கும் இடத்தின் முகவரி மற்றும் லேண்ட்மார்க் (அருகில் உள்ள இடத்தின் அடையாளம் எடுத்துக்காட்டாக கோயில், திரைஅரங்கு, கடைகள், போன்ற விவரங்கள்) ஆகியவற்றுடன், தகவல் அளிப்பவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற விவரங்களை அளித்தால் உரிய நேரத்திற்குள் கண் வங்கி மருத்துவர் குழு வர வசதியாக இருக்கும்.
3. இறந்தவரின் உடலில் இருந்து 6 மணி நேரத்துக்குள் கண்களை அகற்றிவிட வேண்டுமென்பதால், இறந்தவுடன் அருகில் உள்ள கண் வங்கிக்குத் தொலைபேசி மூலம் தகவல் சொல்ல வேண்டும். இறந்தவரின் கண்களை மூடி, மூடிய இமையின்மேல் ஈரப் பஞ்சை வைக்கலாம். உடல் வைக்கப்பட்டிருக்கும் அறையின் மின்விசிறியை நிறுத்திவிட வேண்டும்.
4. கண் வங்கியிலிருந்து மருத்துவர் வீட்டுக்கே வந்து கண்களை எடுத்துச்செல்வார். கண் விழிப்படலத்தை எடுக்க 10 நிமிடங்கள் போதும். எடுத்தவுடன் முகம் விகாரமாகத் தோன்றாது. ஆண், பெண், சிறுவர், பெரியவர், கண்ணாடி அணிந்தவர், கண்ணில் அறுவைசிகிச்சை செய்தவர்கள் என யார் வேண்டுமானாலும் தானம் செய்யலாம். ஒருவரிடமிருந்து தானமாகப் பெற்ற இரண்டு கண்கள், பார்வை இழந்த இரண்டு நபர்களுக்குப் பொருத்தப்படுகின்றன.
5. கண் தானம் செய்வதற்கு ஜாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், ஆண் / பெண் பாகுபாடு ஏதும் கிடையாது. மரணமடைந்த அனைவரது கண்களும் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து மதங்களும் கண் தானம் உட்பட அனைத்துவிதமான தானங்களையும் போற்றுகின்றன.
6. ஒருவரது மரணத்தின் பின்னணியில் ஏதேனும் தொற்று நோய் கிருமிகள், வெறிநாய்க்கடி, கல்லீரல் அழற்சி, கண்களில் புற்றுநோய், உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் புற்று நோய் பரவிய நிலை, எய்ட்ஸ், மஞ்சள் காமாலை போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவர்களது கண்கள் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்'' என்று மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
கண் தானம் குறித்த மேலதிக தகவல்களுக்கு அ.மகாலிங்கம், மொபைல் : 97104 85295, மின்னஞ்சல் முகவரி: mahali@mahali.in ஆகியவற்றில் தொடர்புகொள்ளலாம்.
No comments:
Post a Comment