இவ்விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் ஆகியன விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கும் அவசரச் சட்ட முன்வரைவுக்கு 3 மத்திய அமைச்சகங்கள் நேற்று மாலை ஒப்புதல் அளித்தன. இதனையடுத்து எந்நேரமும் சட்டம் இயற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
'எந்த மாணவரும் பாதிக்கப்படக்கூடாது'
இன்றைய வழக்கு விசாரணையின்போது, நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து அவசரச் சட்டம் இயற்றினால் பாதிக்கப்படுவோருக்கு அரசு என்ன செய்யும் என வினவிய நீதிபதிகள் எந்த ஒரு மாணவருக்கும் பாதிப்பு ஏற்படாமல் தீர்வு எட்டப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றம் தமிழக அரசின் அவசரச் சட்டம் மாணவர்கள் நலனை பாதிப்பதாக இருக்கக்கூடாது எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வந்தது. அண்மையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கிடைக்காது. ஆனால், ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்க மாநில அரசு அவசரச் சட்டம் இயற்றி அனுப்பினால், மத்திய அரசு உதவி செய்யும்’ என தெரிவித்திருந்தார்.
அவசரச் சட்ட வரைவு மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கும் அவசரச் சட்ட முன்வரைவுக்கு 3 மத்திய அமைச்சகங்கள் நேற்று (புதன்கிழமை) ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
விரைவில் அவசரச் சட்டம்:
இன்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் தமிழக அரசின் நீட் அவசரச் சட்டத்துக்கு வரும் 22-ம் தேதிக்குள் ஒப்புதல் வழங்கப்படும் என்றார்.
அவசரச் சட்டத்தை நீதிமன்றத்தால் கட்டுப்படுத்த முடியாது என மத்திய அரசு, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
No comments:
Post a Comment