ஜெயலலிதா மரணம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 26, 2017

ஜெயலலிதா மரணம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்
விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து இன்று (25.9.2017) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சர் பேச்சு:
கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெறும் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து அவரது உடல்நிலை மிக மோசமானது. டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைந்தார்.
அவர் மருத்துவமனையில் இருந்தபோதே பல்வேறு கட்சித் தலைவர்களும் ஜெயலலிதாவை யாரும் பார்க்க முடியாதது குறித்து கேள்வி எழுப்பினர். அவரது மரணத்துக்குப் பின் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் (செப்.22) மதுரையில் பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை. நாங்கள் சொன்னது எல்லாம் பொய். பொதுமக்கள் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.
அவரது இந்தப் பேச்சு ஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பியது. ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில்,  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment