பள்ளி மேலாண்மை குழுவுக்கு நிதி அதிகாரம்; அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, பள்ளி மானியம், பராமரிப்பு மானியம் வழங்கப்படுகிறது.
இதை, பஞ்சாயத்து தலைவர், தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் உள்ளடக்கிய, கிராமக்கல்வி குழுக்கள் வாயிலாக, மேலாண்மை செய்ய உத்தரவிடப்பட்டது.
அரசியல் கட்சியினர் தலையீட்டால், பள்ளிக்கான தேவையை பூர்த்தி செய்ய, சுதந்திரமாக செயல்பட முடியாத சூழல் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, கடந்தாண்டு முதல், கிராமக்கல்வி குழு என்ற அமைப்புக்கு பதிலாக, பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டது.
இதில், பள்ளி தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். வங்கி கணக்கு பராமரிக்கும் அதிகாரம், பள்ளி மேலாண்மை குழுவுக்கு அளிக்கப்பட்டது.
இதன்படி, அனைத்துப்பள்ளிகளிலும்முறையாக, நிதி மேலாண்மை நடக்கிறதா என ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,’பள்ளி மேலாண்மை குழுவில், பிரத்யேக வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. உதவிபெறும் பள்ளிகளில், நிர்வாகிகள், தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சில உதவிபெறும் பள்ளிகளில், நிர்வாக சிக்கலால், மாவட்ட கல்வி அதிகாரி, நேரடி மானியம் வழங்கும் அதிகாரம் பெற்றுள்ளார். இப்பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகம் அமைக்கப்படாவிடிலும், நிர்வாக சிக்கல் தீரும் வரை, தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் குழுக்கள், நிதி கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுசார்ந்த தகவல், விரைவில் இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றனர்.
அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், கிராம கல்விக்குழு கலைக்கப்பட்டு, பள்ளி மேலாண்மை குழுவுக்கு அனைத்து, நிதிசார் அதிகாரங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment