வங்கியில் மினிமம் பேலன்ஸ்’: வாடிக்கையாளர்களை மகிழ்விக்குமா எஸ்.பி.ஐ?
எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கு வைத்திருப்போர், தங்களது கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்’ என்ற நடைமுறையைத் தளர்த்துவதுகுறித்து தற்போது ஆலோசித்துவருகிறது.
'ஏப்ரல் 1-ம் தேதி முதல் எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காவிடில், அபராதம் விதிக்கப்படும்' என்று அந்த வங்கி அறிவித்தது. அதன்படி, பெருநகரங்களில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் 5,000 ரூபாயும், நகரப் பகுதிகளில் இருப்போர் 3,000 ரூபாயும், பகுதி நகரப் பகுதிகளில் 2,000 ரூபாயும், கிராமப்புறத்தில் 1,000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி.ஐ கூறியிருந்தது.
அதன்படி, பெருநகரங்களில் மினிமம் பேலன்ஸைவிட 75 சதவிகிதம் குறைவாக இருந்தால், 100 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும். மினிமம் பேலன்ஸ் 50-75 சதவிகிதத்துக்குக் குறைவாக இருந்தால் 75 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும். 50 சதவிகிதத்துக்குக் கீழ் இருந்தால், 50 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும். நகரப் பகுதிகளில் மினிமம் பேலன்ஸைவிட குறைவாக இருந்தால், 20 முதல் 50 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களின் தொடர் புகார்களை அடுத்து, தனது அபராத விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்துவதுகுறித்து எஸ்.பி.ஐ ஆலோசனையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டாலும், அது மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கு மட்டுமானதாகக் கொண்டுவரப்போவதாகவே வங்கி வட்டாரம் கூறுகிறது.
No comments:
Post a Comment