கல்வி செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
பள்ளிகளுக்கு, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு,
நவம்பரில் வெளியிடப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை என்றும் வரும் நவம்பரில் தமிழகப் பள்ளிகளுக்கு புதிய வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும். தமிழகத்தில் பள்ளிகளுக்கு புதிய பாட திட்டம் தயாரிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தலைமையில் உயர் மட்ட குழுவும், கல்வியாளர்கள் அடங்கிய பாடத் திட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் இடம் பெற்றுள்ள பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதய சந்திரன் உள்ளிட்ட எந்த உறுப்பினர்களையும் நீக்க கூடாது என கோரி காஞ்சிபுரத்தை சேர்ந்த ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், உதய சந்திரன் உள்ளிட்ட எந்த உறுப்பினர்களையும் நீக்க கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உதயசந்திரனை நீக்கிவிட்டு, பிரதீப் யாதவை செயலாளராக அரசு நியமித்துள்ளது என மனுதாரர் தரப்பு வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, மாணவர்களின் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் விளையாடக் கூடாது. அந்த அதிகாரியை மாற்றியது ஏன்? என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த அரசு வக்கீல், உதய சந்திரன் நீக்கப்படவில்லை. அதே நேரத்தில் துறையின் முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பாட திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் நவம்பர் மாதம் புதிய பாடத்திட்ட வரைவு வெளியிடப்படும் என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, உதய சந்திரன் நீக்கப்படவில்லை என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை அக்டோபர் 5ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வக்கீல் சூரியப்பிரகாசம் ஆஜராகி, நீதிபதியிடம் பள்ளிகளில் அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதனால், நீட் போன்ற தேர்வுகளை எழுத மாணவர்கள் கடும் சிரமப்படுகிறார்கள் என்றார்.
இதைக் கேட்ட நீதிபதி, அரசு வக்கீலைப் பார்த்து, ஏற்கனவே, இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏன் உத்தரவை அமல்படுத்தவில்லை. மனுதாரரின் கோரிக்கை குறித்து விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment