கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளும் ஒவ்வொரு வகுப்பிலும் 25% இடங்களில் ஏழை மாணவர்களைச் சேர்க்க வேண்டும். இதற்கான கல்விக் கட்டணத்தை, அதாவது இப்பள்ளிகளுக்கென அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தை அரசே ஈட்டுறுதி செய்யும். இருப்பினும், கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் முறையான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறதா என்றால் கிடையாது.
இந்தச் சட்டத்தின் கீழ் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் ஆவலாக இருக்கிறார்கள். ஆனால், பள்ளிகள்தான் ஆர்வம் காட்டுவதில்லை. 25% இடஒதுக்கீட்டில்
மாணவர்களை சேர்த்துக் கொள்ளாமல் தனியார் பள்ளிகள் இழுத்தடிக்கின்றன. இதற்கான தனி விண்ணப்பங்களை முழுவதுமாக வழங்குவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் பள்ளிகள் அனைத்தும் மே 2-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை வழங்க வேண்டும். ஆனால், பொதுமக்கள் இழுத்தடிக்கப்படுகிறார்கள். 2013 - 14-ஆம் கல்வி ஆண்டில் 40,986 இடங்கள் (69%) நிரப்பப்படவில்லை. இதற்காக எந்தவொரு கல்வி நிறுவனத்தின் மீதும் கல்வித் துறையின் நடவடிக்கை பாயவில்லை.
இனிமேலும் அத்தகைய மெத்தனப் போக்கு நீடிக்கக்கூடாது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்திலேயே இதற்கான தீவிர நடவடிக்கையை தமிழக அரசு முடுக்கிவிட்டால் மட்டுமே 2015-16 கல்வியாண்டில் அனைத்து தனியார் பள்ளிகளும் முழுமையான மாணவர் சேர்க்கையை அமல்படுத்த இயலும். இதற்கு தமிழக அரசு நான்கு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும்.
ஒன்று: ஒவ்வொரு பள்ளியிலும் எத்தனை வகுப்புகள், எத்தனை பிரிவுகள் உள்ளன, இவற்றில் படிக்க அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு, இதில் 25% ஏழை மாணவர்களுக்கான இடங்கள் ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை பள்ளி வாசலில் சாதாரண மக்களும் படிக்கும் விதமாக தமிழில் எழுதி, பார்வையில் படும்படியாக வைக்க வேண்டும். இதை இணையதளத்திலும் கல்வித் துறை வெளியிட வேண்டும்.
இரண்டு: விண்ணப்பத்துக்காக பெற்றோர் ஒவ்வொரு பள்ளியையும் தேடியோடி அலையும் நிலைமை இல்லாதபடி, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதற்கான பொதுப் படிவத்தை தமிழக கல்வித் துறை வெளியிட வேண்டும். இந்தப் படிவத்தைப் பெறும் பள்ளிகள், இதனை பெற்றுக்கொண்டதற்கான ரசீதும் இதே படிவத்தின் அடியில் பள்ளியின் முத்திரையுடன் கையொப்பமிட்டுக் கிழித்துத் தரும் வகையில் இருக்க வேண்டும்.
மூன்று: அனைத்துப் பள்ளிகளிலும் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை, மாணவனின் பெயர், பெற்றோர், முகவரி விவரங்களுடன் பள்ளி வளாகத்திலும், கல்வித் துறை இணையதளத்திலும் வெளியிட வேண்டும். மேலும், 25% இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதது, அல்லது கல்விக் கட்டணம் அதிகமாக செலுத்தும்படி வற்புறுத்தல், ஆசிரியர்களின் அத்துமீறல் உள்ளிட்ட புகார்களை கடிதங்களில் தெரிவிக்க தனி அஞ்சல்பெட்டி எண், இணையதளத்தில் புகார் செய்யும் வசதி மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய அதிகாரியின் பெயர், செல்லிடப்பேசி எண் அனைத்தையும் அரசு அறிவிக்க வேண்டும்.
நான்கு: தனியார் பள்ளிகள் அனைத்தும், எல்லா மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தை வங்கி மூலமாகவே பெறும் கட்டாயத்தை உருவாக்க வேண்டும். அது கல்விக் கட்டணமாக இருந்தாலும், நோட்டுப் புத்தகங்களுக்கான கட்டணம் அல்லது துணி, செருப்புக்கான கட்டணம், பொதுக் காரியங்களுக்கான தானதர்மத் தொகை என எதுவாக இருந்தாலும் அனைத்துவிதமான கட்டணங்களையும் வங்கி மூலமே செலுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, 25% ஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்த்தால், அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது; கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்களுக்கு கல்விக் கட்டணமே கிடைக்கவில்லை என்றும், இந்த நடைமுறையில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் தனியார் கல்வி நிறுவனக் கூட்டமைப்புகள் குறை கூறி வருகின்றன. நியாயமாகப் பார்த்தால், ஏனைய வசதி படைத்த மாணவ - மாணவியரிடம் நன்கொடையாகவும், கட்டணமாகவும் அதிகமான தொகை பெறும் தனியார் பள்ளிகள் 25% மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அவர்களே ஏற்றுக்கொண்டாலும் தகும்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் தனியார் பள்ளியில் படிப்பதால் உறுதிப்படுத்தப்படும் என்கிற நம்பிக்கையினால்தான் தனியார் பள்ளிகள் கேட்கும் கட்டணத்தைக் கடன் வாங்கியாவது கட்டுகிறார்கள். ஒவ்வொரு பள்ளிக்கும் தமிழக அரசு கல்விக் கட்டணத்தை நிர்ணயித்த போதிலும், அதை தனியாக வசூலித்து ரசீது தரும் தனியார் கல்வி நிறுவனங்கள், தாங்கள் நிர்ணயித்த கூடுதல் கட்டணத்தை வேறுவிதமாக வசூலிக்கும் நிலை தடையின்றித் தொடர்கிறது. இதைக் கண்காணித்து, பள்ளிக் கல்வித் துறை இதுவரை எந்தவொரு பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. அப்படி நடவடிக்கை எடுப்பது பரவலாகத் தெரிந்தால் மட்டுமே, கடுமையான தண்டனை உண்டு என்கிற பயத்தில் தனியார் பள்ளிகள் 25% ஒதுக்கீட்டையும், முறையான கட்டண வசூலையும் உறுதிப்படுத்தும். இது கல்வித் துறைக்கும் அரசுக்கும் தெரியாதா என்ன?
ஏப்ரல் மாதத்திலேயே 25% இடஒதுக்கீடு மற்றும் கல்விக் கட்டணத்தை நிர்ணயித்தலை முடிப்பதன் மூலம் இந்த ஆண்டாவது கல்வி உரிமைச் சட்டம் நடைமுறையில் அமலுக்குக் கொண்டுவர அரசு வழிகோல வேண்டும்.
நன்றி தினமணி
No comments:
Post a Comment